பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 303


என்று நோன்பெடுத்துள்ளார். துறவிகளின் வாழ்க்கைக் கடமை புறநிலைத் தொடர்புடையது மட்டுமன்று. உள்ளுணர்வு சார்புடையதுமாகும். சிறப்பாக அவர்கள் இதயத்தில் அருளுணர்வு இடம்பெற வேண்டும். அருள் என்பது யார் மாட்டும், எதன் மாட்டும் விருப்பு, வெறுப்புக்களின் கலவையில்லாத மாசற்ற பரிவும் பாசமும் காட்டுதலாகும். இத்தகு அருளுணர்வுடையோர் எங்ஙனம் கதறக்கதறக் கழுத்தையறுத்து இரத்தம் சொட்டச் சொட்ட இரக்கமின்றிப் புலாலை உண்பார்கள்? அப்படி உண்பவர்களை எங்ஙனம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்: என்று வினவுகின்றார் திருவள்ளுவர். "துறவற உலகிற்கு" அருளாட்சியும், இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன. இவ்விரு வேறு உலகமும் தமக்குரிய அருளாட்சியையும், பொருளாட்சியையும் போற்றுமாயின், பொருளால் அருள் வளரும் - அருளால் இன்பம் பெருகும்!

"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை. ஊண்தின் பவர்க்கு."

(252)
எது தவம்?

திருக்குறள் ஓர் ஒழுக்க நூல் - அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட - நடைமுறை சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. "வாழ்வாங்கு வாழ்தல்" என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்கனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது.