பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"வலியின் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புவியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"

(273)

""தவம்மறைந்து அல்லவை செய்தல் புதர்மறைந்து
வேட்டுவன் புன்சிமிழ்த் தற்று"

(274)

ஆகிய குறட்பாக்களில் வருகின்ற இரு உவமைகளும் திட்டமிட்டுச் செய்கின்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாக இருப்பது அறிந்துணரத் தக்கது. ஆதலால், உலகியல் இன்பங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தவ வேடம் பூண்டாலும் அதாவது தவம் செய்வதற்குத் துணை செய்யக்கூடிய மழித்தல், நீட்டல் ஆகிய சாதனங்களை மேற்கொண்டாலும் தாம் விரும்பிய - விருப்பு வெறுப்புகளுக்கு ஆளான உலகியலையே செய்வதால், திருவள்ளுவர் அவர்களை நோக்கி அறிவுறுத்துகின்றார். இன்றைய நிலையை நுண்ணியதாக உணர்ந்தவர்களுக்கு இந்த உரை விளங்கக் கூடும்.

உலகம் பழித்ததை ஒழிக்கவன்றோ தவம். அம்முயற்சிக்குரிய சாதனமல்லவா மழித்தலும், நீட்டலும். அங்ங்ணமிருக்க உலகு பழிப்பதை ஒழிக்க விருப்பமேயின்றி அதனைச் செய்வதையே இலட்சியமாகக்கொண்டு சாதனங்களை மேற்கொண்டவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கூறுவது. உலகு பழிப்பதைச் செய்து கொள்வதற்குரிய சாதனம் அல்ல தவ வேடம். உலகு பழித்ததை ஒழித்துவிடின் சாதனமே வேண்டாம் என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகின்றார்.

உலகம் பழித்த தொழித்துவிடின் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்பதே திருவள்ளுவரின் தெளிவான கருத்து.