பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அது கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னது போல, வெள்ளாட்டுக்கு இரை வைக்கும் மனிதர்களின் கருணையை ஒத்தது. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது - நிலை பெறாது. அவர்கள் தாம் கருதியது முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர். அதாவது தம்மோடு பழகுகின்றவர் களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். காலம் வாய்க்கும்போது கருதியதை முடித்துக் காற்றெனக் கடுகி விடுவர்

அத்தகையோரிடத்து ஒரு பொழுதும் அன்பு இருந்ததில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான். நேர் வழியில், உழைப்பால் பொருளிட்ட முடியாதவர்கள் இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும்.

""அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்”

(285)


துறவும் துய்த்தலும்

னித குலத்தில் ஏக்கம் பெரும்பாலும் ஏன்? முழுமையும்கூட பொருளியலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. பொருள், உலக இயக்கத்தின் அச்சாணியாக அமைந்து விளங்குகின்றது. மண்ணோடு தொடர்புடைய வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருள் தேவை. அதனால் அன்றோ, ஞானநிலையில் நின்ற மாணிக்க வாசகரும், முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார். அருள் பழுத்த நெஞ்சினராய் அவர் எடுத்த திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்கும் பொருள் வேண்டுவதாயிற்று. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக மிக இன்றியமையாது வேண்டப்படுவதாகிய இப்பொருளினிடத்து மக்களுக்குப் பற்றிருத்தல் இயற்கையேயாம்