பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிரிக்கவும் வாழ்க்கை முடியுமானால் அஃது இரங்கத்தக்கது. இத்தகையோரின் மரணமும் வரவேற்கத்தக்கது.

சார்புகெடின் நோயில்லை!

லகியற்கையின் அமைப்பு இன்பமேயாம். உலகத்தின் தோற்றம், வைப்பு, நடைமுறை ஆகிய அனைத்தும் உயிர் இன்பத்தினை மையமாகக் கொண்டதேயாம். ஆக இன்பமே இயற்கை. துன்பமோ செயற்கை. ஆனால், துன்பத்தின் கர்த்தாக்களாகிய, தீய மனிதர்கள் அல்லது அறியா மாந்தர்கள் துன்பமும் இயற்கையென்றே பறை சாற்றுகின்றனர். பலர் நம்பியும் விடுகின்றனர். துன்பத்தின் தொடக்கம் பருப்பொருளிலுமல்ல; பரந்த உலகத்திலுமல்ல. துன்பம் மிக நுண்ணிய இடத்தில் -நுண்ணிய அளவிலேயே தோன்றி வளர்கிறது. ஆனால், தோற்றம் நுண்ணிய இடத்திலேயாயினும் அது வளர்ந்து வளர்ந்து பரந்த இடத்தைப் பிடித்து விடுகிறது. துன்பம் ஒரு மனிதரிடத்துத் தோன்றி பல மனிதரைப் பற்றியதா? அல்லது பல மனிதரிடத்தில் ஒரே நேரத்தில் பற்றியதா? என்று ஆராய்ந்தால் ஒருமனிதரிடத்தில் தொடங்கித்தான் உலகைக் கவிழ்ந்து மூடியது என்று அறியலாம்.

ஒரு வீட்டின் கூரையில்பட்ட நுண்ணணுப் பிரமாணமான ஒரு நெருப்புப்பொறி, பல நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்தழிப்பதைப் போலத் துன்பமும் ஒரு முனையில் தோன்றிக் கவிந்திருக்க வேண்டும். துன்பம் காரியமேயாம். காரணமன்று. உடல், உணர்வு, அறிவு ஆகிய வற்றை நிறைநல உழைப்பில் ஈடுபடுத்த மறுப்பவர்கள் காரியங்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். காரணங் களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்குக் காரியம் நடந்தால் சரி. காரணம் வேண்டிய அவசியமில்லை.