பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 327


இந்த மனப்போக்கு உடையவர்களே உயர்ந்த மாளிகையைக் கட்டியவர்கள். மதிற் சுவர்களைக் கட்டியவர்கள், பூட்டுகளைப் படைத்துத் தந்தவர்கள். களவு, காவல் தத்துவத்தின் படைப்பாளர்கள். இவர்களே நியதியாகிய விதிக்கு இல்லாத வலிமையை உண்டாக்கியவர்கள். காரியங்களைப் பற்றிக் கவலைப்படுவது பயனற்றது. ஆனால், காரணங்களைப் பற்றிக் கவலைப்படுதல் வாழ்க்கையின் இன்றியமையாக் கடமை. துன்பத்தின் காரணம் தீமை. துன்பம் சேய், தீமை தாய். அது என்ன தீது? தன்னையே சுற்றி வட்டமிடும் தீமை. ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் தன்னைத் தானே சுற்றினால் மயக்கம் வராதா? வேடிக்கைக்காக வேண்டுமானால் ஓரிரண்டு தடவை சுற்றலாம். பக்திக்காக வேண்டுமானால் இன்னும் சில தடவை சுற்றலாம். இந்த இரண்டு வகையில் சுற்றுவதற்கும் அடிப்படை உணர்வு உண்டு. அந்த உணர்வுக் கலப்பின் சிந்தனையை, நிறுத்திச் சுற்றினாலேயே பொருளுண்டு. மயக்கமும் வராது. உணர்வின் ஆற்றல், மயக்கத்தோடு போராடி மயக்கத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். வெறும் சுற்று வெற்றுச் சுற்றேயாம். மயக்கத்தைத் தரும். அஃதென்ன உணர்வு? எல்லா உலகமும் ஒன்று. 'எவ்வுயிரும். எமதுயிர் என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டினை - மனிதகுல ஒருமைப்பாட் டுணர்வினை எண்ணி நினைந்து அதற்கேற்ப ஒழுக வேண்டுமென்ற விழுமிய விருப்பத்தைப் பெற்று அதை நிலைநிறுத்திக் கொள்ள, உலகின் சிறுவட்டமாகிய நான்கு திசைகளைத் திருப்பிச் சுற்றுதல் ஒரு பாடம்; ஒரு பயிற்சி முறை. முன்னையது உடற் பயிற்சி; பின்னையது உணர்வுப் பயிற்சி.

இங்ஙனம் காரணங்களை யறிந்து நெறி முறையில் நின்று வாழுதல் தீமையினின்றும் விடுதலை தரும். துன்பமும் மாறும், தீமைக்கெல்லாம் தீமை தன்னலமேயாம். தனது நலமின்றி மனிதன் வாழ முடியுமா? நியாயமான வினா. நலம்