பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


- நெறியல்லாத நெறியை வள்ளுவரும் நியாயப்படுத்தியிருக்கிறாரென்று கூறுவது வள்ளுவத்திற்குப் பெருமையன்று.

"இருவேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதனும் வேறு”

(374)

என்ற குறளுக்கு அறிவும் செல்வமும் உலக இயற்கையில் மாறுபாடுடையன. இவ்விரண்டும் உடையவராக வாழ்வ தரிது என்பது புலால் வேட்கையுடையவன் கடவுள் பெயரால் பலியிட்டதைப்போலவே யாகும். 'திரு' என்ற சொல்லுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மை என்று பொருள் கொண்டார் பேராசிரியர். இது மிகச் சிறந்த கருத்து. கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையவராக வாழ்தல் அரிய முயற்சியாகும். அறிவோ, ஆற்றலோ, வளம்பல உடைமையோ கண்டோரால் விரும்பத்தக்க வாழ்க்கையை வழங்கி விடுவதில்லை. தன்ன்லத் துறவும், பிறர் நலம் பேணும் வேட்கையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்கும் உண்மையும் கொண்டு தொண்டலால் உயிர்க்கு ஊதியமில்லை என்று கருதிக் கருதி இனிய அன்பால் அருளார்வத்தால் பலரைத் தழுவி வாழும் வாழ்க்கையே பலரால் விரும்பப்பெறும் வாழ்க்கை. இதனையே, "திரு” என்றார். தெள்ளிய அறிவுடையோர் பலர் சமுதாய வாழ்க்கையில் தோற்று இருக்கின்றனர். அறிவின் காரணமாகவே பலரையும் ஆராய்ந்து பகை வளர்த்துக் கொண்டவர் இல்லையா? அறிவுடையோர் என்ற முனைப்பால் அழிந்தவர்க ளில்லையா? அறிவுடையோ ரெல்லாம் அன்புடையோராக இருப்பதில்லை என்ற ஐயத்தின் வினாவே,

"அறிவினால் ஆகுவ துண்டோ? பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை".

(315)