பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொதுவாக நம்முடைய மக்களிடத்தே இன்றுவரை விவாதத்திற்குரியதாக இருப்பது ஊழ் பெரிதா? உலையா முயற்சி பெரிதா? என்பதுதான். ஊழ் வலிமையானது என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டுவார்கள்.


கல்பொருந் திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தனம்."

- புறம்

ஆற்று வெள்ளத்தில் போகும் படகு வெள்ளத்துடனேயே அடித்துச் செல்லப்படும் என்பது உவமை. படகு ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுதலில் என்ன வியப்பு? அது சடப் பொருள்தானே? படகுக்கு ஏது பகுத்தறிவு: படகுக்கு ஏது சிந்தனை? ஏது அறிவு? ஏது செயல் திறன்? மனிதனோ சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அறிவும் செயல் திறனும் உடையவன். இவன் வெள்ளம் போகிற போக்கிலேயே இழுத்துச் செல்லப் பெறுவானானால் மதியிலி - நீந்தத் தெரியாதவன் - ஆற்றல் இல்லாத சோம்பேறி என்றுதான் கொள்ளவேண்டும். சக்தி படைத்த - மதியுடைய - நீந்தித் தெரிந்த மனிதன் படகில் இருந்தால் ஆற்றுப் போக்கை எதிர்த்தன்றோ செல்லுவான்?

திருவள்ளுவர் பெருமகனாரின் 'ஊழிற் பெருவலி யாவுள?' என்ற வினாவை எழுப்புவர் சிலர். ஆம். "ஊழிற் பெருவலி யாவுள"? என்பது வள்ளுவர் வாக்குத்தான். ஆனாலும் அவர் எடுத்துக்கொண்ட ஒரு பொருளை எப்படி முடிக்கிறார்? கருத்துக்கு எப்படி ஊட்டங் கொடுக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அந்தக் குறளையே முடிக்கும் பொழுது ஊழ் முந்துறும் என்கிறார்.

ஊழ், உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடைய முயற்சியை முந்திக் கொண்டு வந்து நிற்கும்