பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழாதன நான்கு பயன் உடைத்து” என்று பாராட்டப் பெற்றுள்ளது. குறிஞ்சி நிலம் மலையும் மலைசார்ந்த இடமுமாகும். மலையோடு இணைந்தது சோலை. மலையிடை நிலவிவரும் மரங்கள், நிலத்தினின்றும் உரத்தை எடுத்துக் கொண்டு வளர்கின்றன. அந்நிலத்திற்குத் திரும்பவும் தம்முடைய சருகுகளை உரமாகத் தருகின்றன. அதுபோலவே தம்மை வளர்க்கும் நிலத்தைக் காய் கதிர் சுடாத வண்ணம், விரிந்த கிளைகளைப் பரப்பிப் பாதுகாத்து விடுகின்றன. தம்மிடம் பெய்த மழையை இறுக வைத்துப் பின்னர் அருஞ்சுனையாக மாற்றித் தரும் ஆற்றலும் மலைக்கு இருக்கிறது. உயர வளர்ந்தமையினாலும் மிக உயரிய பண்பாகிய தன்மையைப் பெற்றிருத்தலாலும், வானினைத் தடுத்து ஆட்கொண்டு மழை காண முடிகிறது. தண்ணளியிற் சிறந்த நெஞ்சமுடையார் பயன்பல காண்பர். இதுவே நெறியும் நியதியுமாகும். ஆதலின் குறிஞ்சி நிலத்திற்குப் பேணும் மனிதரின்றியே வளமுண்டு. மனிதன் அவற்றைப் பேணாமல் தள்ளினாலும், அவனை வெறுத்துத் தள்ளாவிளையுள் என்று பொருள் கொண்டால் பிழை யில்லை.

இங்ஙனம், கொள்ளலும், கொடுத்தலும் முறைமையி லுடைய கருப்பொருளை உடைமையினால் தான் போலும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை, இன்பம் கொடுத்தலும், கொள்ளுதலுமாகிய புணர்தல் என்று வகுத்தார்கள் போலும்!

அடுத்து, நிலத்திற்கு இன்றியமையாதது தக்கார் ஆவர். பொதுவாக மனித இனத்தில் "பகைப் பூண்டு" வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது. விருப்பு வெறுப்புக்களால் சமுதாயம் அலைக்கப்படுகிறது. காய்தல் உவத்தலின்றி மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்கும். தகைமையே தக்கார்க்கு இலக்கணமாகும். தக்காரையே சான்றோர் என்றும் அழைத்தல் மரபு. சான்றோருக்கு நபர்கள் முக்கியமல்லர். அவர்களுக்கு உற்றாருமில்லை; உறவினருமில்லை. அவர்