பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 351


களுக்கு அன்பினைக் காட்டுதற்கு எல்லை வரம்புகள் கிடையா. அதனாலேயே தக்கார் தகவிலார் என்பதை எச்சத்தால் அறியும்படி வள்ளுவம் கூறிற்று. "எச்சம்” எஞ்சி நிற்கும் புகழ். தம் சுற்றத்தாரிடையே புகழ் பெற்று விளங்குதற்குத் தகைமை வேண்டிய அவசியமில்லை. பரிவும், பாசமும் போதும். இன்று இதற்கே பஞ்சம்! ஆதலால் சாதி, இனம், மொழி, கட்சி வேறுபாடுகளின்றி அறம் நோக்கி மனித சமுதாயத்தினிடத்து அன்பு செலுத்துகின்ற தக்கார் நாட்டிடை இருந்தால் தான் மோதல்கள் தவிர்க்கப் பெறும். உறவு முறை வளரும். ஆதலால் தக்கார் நாட்டிற்கு இன்றியமையாதவர் என்றார்.

தள்ளா விளையுளைச் சார்ந்து தக்காரைச் சொன்னதற்குக் காரணம் யாதெனின், தள்ளா வினையுள் இருந்தும். விளை பொருள் பல்கிப் பெருகியும், ஒருவரோடொருவர் உறவு கலந்து பங்கிட்டு உண்ணும் நெறி முறைக்கு அறநெறியிற் செலுத்தும், தக்கார் இலராயின் தள்ளா விளையுளால் ஆய பயன் இல்லாமற் போகிறது. அதனாலேயே தள்ளா விளையுளைச் சார்ந்து தக்காரைக் கூறினார்.

அடுத்து நாட்டிற்குத் தேவை தாழ்விலாச் செல்வர் என்பது வள்ளுவத்தின் கருத்து. குறைவுபடாச் செல்வமுடையர் என்று பரிமேலழகர் எழுதுகிறார். செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்பது வள்ளுவத்தின் கருத்தாக இருக்க முடியாது. அங்ங்ணமாயின் நத்தம் போற்கேடு என்ற குறளோடு முரண்படும். செல்வத்தின் பயன் ஈதலும், துய்த்தலுமேயாம். செல்வமுடையானை மருந்து மரம் போல வடுக்கள் பெற்றும், உறுப்புக்களை யிழந்தும், மனித குலத்திற்குப் பயன்பட வாழ்க என்று குறிப்பிடுவார். அதோடு தாழ்தல் என்ற சொல் குறைவு படுதல் என்ற பொருளில் வழங்கப்படுதல் பெருவழக்கில் இல்லை. 'தாழ்தல்' என்ற சொல் பெரும்பாலும் துலாக் கோலில் - தூக்கும்போது தட்டுகள் உயர்தலும் தாழ்தலும் என்ற வழக்கு நிலவுகிறது.