பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 367


இல்லோனுக்கும் இடையில் இன்று நிகழ்வது ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றிக்கொள்வது என்பதேயாம். இதனால் என்ன பயன் விளைய முடியும்?

இன்று, பொதுப்படையாக உடையோனிடத்திலிருக்கும் அளவுக்குச் சிக்கன மனப்பான்மை இல்லாதவர்களிடத்தில் இல்லை. உதாரணம், திரைப்படக் கொட்டகைகளில்கூட மூன்றாம் வகுப்பே நிரம்பி வழிகிறது. இங்ஙனம் வரவுக்கு ஏற்பச் செலவு செய்யும் மனமில்லாதவர்க்கும் - செல்வத்தைப் போற்றி வாழாதார்க்கும் உதவி செய்தும் உயர்த்திவிட முடியாது. அவர்கள், பெறும் உதவியின் எல்லையையும்கூடத் தம்முடைய தேவைக்கு ஏற்ப நீட்டி பெற்றது கொண்டு அமைதி கொள்ளமாட்டார்கள். கொடுத்தவனுக்கும், கொடுத்து உயர்த்த முடிந்ததே என்ற மன நிறைவு இருக்காது. பெற்றவர்களுக்கும் எவ்வளவு பெற்றிருந்தாலும் பெற்றோம் என்ற மனநிறைவு இருக்காது. இத்தகைய மனப்போக்குகளின் காரணமாக வறுமை மாறாமலே நம்முடைய நாட்டில் நிரந்தரமாக இருந்து வருகிறது. இத்தகைய இழி மனப்போக்கு இருக்கும்பொழுது பொதுவுடைமைச் சமுதாயத்தைத் தோற்றுவித்தாலும் "உழைக்காது போனால் தண்டனையுண்டு" என்ற நியதியை வலியுறுத்தாவிடில் பயனில்லை. நம்முடைய நாட்டில் கூட்டுறவு - பொதுத்துறைத் தொழில்கள் வளமாக அமையாததோடன்றி ஊழலும் பெருகியிருப்பது இதற்கோர் எடுத்துக்காட்டு.

திருவள்ளுவர் சமுதாய ஒப்புரவு வாழ்க்கையை விரும்புவர். வறுமையை எதிர்ப்பவர். அதனாலன்றோ,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான்"

(1062)

என்று முழங்கினார். ஆயினும் ஒரு சிலருடைய வறுமையைக் கண்டு, திருவள்ளுவர் மனம் கொதிப்படையவில்லை! அவர்களை அந்நியர்களாகவே பார்க்கச் சொல்லுகிறார்.