பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருந்தது. மிகப் பழங்காலத்தில் - இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்த காலத்தில் துன்பம் தரும் வனவிலங்குகளை அழித்து வெற்றி கொள்ளுதல் விலையாகக் கருதப்பெற்றது. அப்பொழுதே, காதலிக்கு தான் அடித்துக்கொன்ற புலியின் பல்லை அணிகலனாக வழங்கிக் காதலியை அடையும் வழக்கம் ஏற்பட்டது. அந்தப் புலிப்பல் அணியும் வழக்கமே படிப்படியாகத் தேய்ந்து உருவம் மாறி இன்று தாலியாக இடம் பெற்றிருக்கிறது. தங்கம் யாருக்கோ சொந்தம்! பொற்கொல்லன் தாலி செய்கிறான்! புதுமணத் தம்பி தாராளமாக எடுத்துப்பூட்டி விடுகிறான்! அதற்கு அடுத்த கட்டத்தில் இயற்கையைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் தொழில் தோன்றி மனிதனிடத்தில் செய்தொழில் பெருகி வளர்ந்த பொழுது புலிப்பல்லுக்குப் பதில் காதலிக்குப் பொருள் வழங்கிக் காதலியையடையும் வழக்கம் தோன்றிற்று. இந்த அடிப்படையிலேயே அகத்திணை இலக்கண இலக்கியங்களில் காதலியைக் காதலன் ‘பொருள் வயிற்’ பிரியும் துறை பேசப்படுகிறது. நெடுந்தொலைவிற் பிரிந்து சென்று பெரும்பொருள் ஈட்டிவந்து காதலிக்குத் தந்தே, காதலன் காதலியை அடைந்திருக்கிறான். ஆனால் இன்றோ, காதலன் தான் மணக்கப்போகும் பெண் வீட்டில் பொருள் கேட்டு வாங்கி பெண்ணைச் சார்ந்து வாழ்கிறான். இத்தகைய பேதைகளையும் பெருநிலம் தாங்குதல் பொறையுடைமை கருதிப்போலும்!

திருவள்ளுவர், காதல் வாழ்க்கையை அறநெறிப்படுத்தி அழகுற விளக்கியவர். காதலன் காதலியுடன் கூடி மகிழ்ந்து இன்புறுதலுக்கு வள்ளுவர் காட்டும் உவமை மிகமிக உயரியது. மனித சமுதாயத்தின் இன்பநுகர் உணர்ச்சியை எதிர்த்து அழிக்காமலும் ஒடுக்காமலும் அந்த இன்பத் துய்ப்பை அறவுணர்வின் பாற்பட்டதாகவும் சமுதாய நலத்தைப் பின்னணியாகக் கொண்டதாகவும் கொண்டு விளக்கும் திறனை என்னென்போம்!