பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேற்றுமைகள் இருக்கலாம்; இருக்கவும் கூடும். ஆயினும் காலப் போக்கில் இவையும் கூடத் தவிர்க்கப்படுதலே மனித குலத்திற்கு நல்லது. எப்பொழுது: திருக்குறள் கூறும் நெறியில் அறிவறிந்த ஆள்வினையுடைமை மானுடத்திற்கு அழகென்று உணர்ந்து, உளமார உழைக்கும் உள்ளப்பாங்கு ஏற்படும் நிலை வரும் வரையில்! உழைக்காமல் உண்பது வெட்ககரமானது என்று உணரும் நிலை வரும் வரை ஊதியத்தில் வேறுபாடிருக்கும்; ஊதிய வேற்றுமைகளுக்கேற்ப நுகர்விலும் வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாடு, வளரும் சமுதாயத்திற்கு உந்து சக்தியாக அமையும். எந்தச் சூழ்நிலையிலும் உற்பத்திக் களங்களையும், உற்பத்திக் கருவிகளையும் எவரும் தனியுடைமையாக்கிக் கொள்ளும் முயற்சிகள் முளையிலேயே ஒடுக்கப் பெறும். மனித குலத்திற்குத் தீங்கிழைக்கும் சுரண்டும் தன்மையுடைய பொருளாதார ஆதிபத்தியம் உருவாக இடமளிக்காது.

திருக்குறள் தோன்றிய காலத்தில் வேளாண்மைத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் தொழிலாகக் கொண்ட சமுதாயம் இருந்திருக்கிறது. உலோக அடிப்படையில் அமைந்த தொழில்களும் உழு கருவிகள் செய்தலும் ஊக்குவிக்கப் பெற்றன.

குழல், யாழ் முதலியன திருக்குறளில் பேசப் பெற்றிருப்பதால் இசைக்கருவிகள் செய்யும் தொழில்களும் வளர்ந்திருக்கின்றன என்று தெரிகிறது. "அறு தொழிலோர்" என்று திருக்குறள் குறிப்பிடுவது உழவர், நெசவாளர், தச்சர், கொல்லர், வணிகர், படை வீரர் ஆகிய தொழில்கள் செய்தோரையேயாகும். இத்தொழில் பிரிவுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன; இனியும் தொடர்ந்து வருவன.

மனித சமுதாயத்தின் சிறந்த தொழில்களில் ஒன்றாகிய வாணிகம் திருக்குறட் காலத்தில் இருந்திருக்கிறது. ஆயினும் தொழிற்புரட்சி ஏற்படவில்லை. இன்றைய மக்கள் தொகை அனைத்திற்கும் நல்வாழ்க்கை வழங்கவும் காலத்தொடு வளர்ந்துள்ள நுகர்வுப் பொருள்களின் வளர்ச்சிக்கும்