பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனத்தைப் பெறுவோமானால், வாழ்க்கையில் எல்லா வெற்றிகளும் கிடைக்கும். அதனாலன்றோ, வறட்சித்தன்மையுடைய கிழத்தன்மை வராமல் வாழ, சான்றோர் வாழும் ஊரில் வாழ்தல் துணையென்று புறநானூறு பேசுகிறது.

ஆதலால், பொருளற்ற வாழ்க்கையைவிட - அழிவற்ற வாழ்க்கையைவிட - தமக்கு இனமல்லாதவர் வாழும் ஊரில் வாழ்தல் கொடுமையினும் கொடுமையானதாகும். நம்மோடு வாழ்பவர், நம்மொடு முரண்பட்ட இனமாக இருப்பின், நம்முடைய வாழ்க்கை வறிதே பாழாகப் போய்விடுகிறது. வித்துக்கு இனமாகிய மண் கிடைக்காது போனால், முளையும் இல்லை, செடியும் இல்லை; மரமும் இல்லை; பூத்துக் குலுங்குதலுமில்லை; வழிவழி வாழ்தலும் இல்லை. அதுபோலவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒத்த இனமல்லாது போனால், ஊக்கமில்லை; உணர்வில்லை; உழைப்பில்லை; முன்னேற்றமில்லை. அவனுக்கும் பயனில்லை; அவனுடைய சமுதாயத்திற்கும் பயனில்லை. ஏன்? கடவுளுக்கேகூடப் பயனில்லை.

ஆதலால் நமக்கு ஒத்த இனமுள்ள ஊர்களைத் தேடி வாழ்தல் நல்லது. அங்ஙனம் இல்லாது போனால், நம்மோடு வாழ்பவர்களையாவது நமக்கு ஒத்த இனப்பண்பு உடையவர்களாக உருவாக்கிக் கொள்வது அவசியம். இங்கு இனம் என்பது புறத்தால் அல்ல; உணர்ச்சி வயப்பட்டதுமல்ல; தேர்ந்து தெளிந்த அறிவும், நல்லுணர்வும் இன்றியமையாதது. அவர்கள் கோவலன் மாட்டுக் கண்ணகி காட்டிய பரிவையும், பாண்டியன் நெடுஞ்செழியனிடத்தில் கண்ணகி காட்டிய வெகுளியையும் ஒத்து, நம்மிடத்தில் பரிவும், உரியபோது கண்டிப்பும் உடையவர்களாக இருக்கவேண்டும். விரைந்தோடும் வண்டிக்கும் தடைக் கருவி (பிரேக்) தேவையே. அதுபோல, முன்னேற்றத் திசையில் உந்திச் செலுத்தி - உரியபோது விபத்துக்களின்றித் தடுத்து நிறுத்திப்