பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 383


கொள்ளாமல் மழை பெய்கிறது என்று கூறி வீட்டில் ஒரு மூலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டுபடுத்துத் தூங்கினால் வாரி வளம் பெருக்குமா? அல்லது வளம்தான் பெருகுமா? வான்மழை பயனுடையதே ஆயினும், பயன்படுத்துவோரின் திறனைப் பொறுத்தே மிகுதியும் பயன்படுகிறது. நிலம் உண்டு. ஆனால் தரிசு! திலங்கள் தரிசாகக் கிடக்குமாயின் ஏது பயன்? வாழ்தல் ஒரு கலை, நுண்கலை; கவின்கலை, மானிடரில் சிலரே வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழ்வதில்லை. ஊனுக்குரிய குற்றேவல் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

அதாவது, ஊனினுக் குணவளித்து வளர்த்து, அதனைச் சுமந்து உலாக்காட்டி, உறங்கல் செய்து ஏவல் செய்வார்கள். ஊனினால் ஆய பயனை அடையமாட்டார்கள். வாழ்தல் என்பது ஆற்றல் மிக்க ஒரு கலை. அப்படி வாழ்பவர்கள் வாழ்க்கையில் தெளிந்த சிந்தனையின் பதிவுகள் இருக்கும். காலமனைத்தும் கடமைகளாக வடிவுற்றிருக்கும். ஆன்ற அறிவும், ஆள்வினையும் வையகத்திற்கு வளம்பல சேர்க்கப்பயன்படும். அவர்தம் வாழ்க்கையில் துன்பமில்லை. ‘இன்பமே எந்நாளும், துன்பமில்லை’ என்ற அருள் வாக்குக்கு இலக்கியமாகத் திகழ்வர். வையகத்தையும் திகழவைப்பர். அதனால் வான் சிறப்புக்குப் பயனுண்டேயாயினும் அந்தப் பயனைத் தரத்தக்கவர்கள் வாழ்பவரே. வாழ்வார், வீழ்வார் இரண்டும் முரண்பட்ட சொற்கள். வாழ்வதற்குத் தன் முயற்சி தேவை. வீழ்தலுக்கு யாதொரு முயற்சியும் தேவையில்லை. அஃதியற்கை. பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணீரை ஏற்றுதற்கு முயற்சி தேவை. ஆனால் மேட்டிலிருந்து பள்ளத்திற்குத் தண்ணீரைக் கொண்டு வர முயற்சியே தேவையில்லை. மனிதரில் பலர் வாழ்வது போலக் காட்டிச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை மாணிக்க வாசகரும், "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" என்று அழகுறக் காட்டுகின்றார். இந்த வையகம், வாழ்வார்களை