பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும் கூறியுள்ளார். இன்றோ, புணர்ச்சியின்றேல் அது காதலில்லையென்று பலர் கருதுகின்றனர். அதனால் ஆழமான அன்பைச் சமூகம் இழக்கிறது. காதலிக்கப்படும் பொருள் எதிரே இருந்து அன்புணர்ச்சி தலைப்படுவது புலாலுடம்பின் கவர்ச்சி மிக்க தூண்டுதலாகவும் இருக்கலாம். உடனடியாக நிறைவேற்றத் துடிக்கும் அகோர உடற்பசியாகவும் இருக்கலாம். அது நெருப்புப்போன்றது. நெருப்பிற்படும் பொருள் எல்லாம் அழியும். இதனை யாரும் காதல் என்று சொல்வதில்லை. புறத்தூண்டுதலில்லாது நெடுந்தொலைவிலிருக்கும்பொழுது நெஞ்சத்திற்குள் ‘உள்குதல்’ என்ற அகத்தொழிற்பாட்டின்மூலம் காதல் செய்து இன்பம் ஆர்தலே உயரிய காதல். இந்தக் காதல் பழக்கம் கணவன் மனைவியரிடையே ஏற்படுமாயின் அன்பும் பெருகும்; நலன்களும் நாளும் வளரும்; குடும்ப நலனும் இயற்கையிலமைந்த கடலணைபோல அணைகட்டும். ஆதலால், புணர்ச்சிகளின் வேட்கை தணிந்து நெஞ்சு நிறைந்த காதலில் மக்கள் உலகம் திளைத்து மகிழவேண்டுமென்பதே வள்ளுவர் படைத்த காதல்!

உற்ற துணை!

வாழ்க்கை ஒரு போராட்டமே! தனிமனிதனின் பிறந்தநாள் தொட்டு வாழ்க்கைக் களத்தில் போராடி அடி அடியாக முன்னேறுகிறான். மனிதனைச் சூழ்ந்திருக்கும் பகையோ அளப்பில. அகத்திலும் புறத்திலும் பகையே சூழ்ந்திருக்கிறது. ஆயினும், மொத்தத்தில் ஆராயும்பொழுது, பகைப்புலத்தின் ஆற்றல், மனித ஆற்றலிலும் விஞ்சியதன்று. அகப்பகையேயானாலும் புறப்பகையேயானாலும் அவை இயற்கையல்ல. மனிதன் தன் அறியாமையை ஓயாது எதிர்க்கும் போர்க்குணத்துடன் போராடிக் கொண்டிருப்பானானால் இறுதியில் அவனுக்கு வெற்றியே கிடைக்கும். ஒருகால் வெற்றி கிடைக்காது போனாலும், பகையின் ஆற்றல்