பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மீதே பழியைப் போடுவர். கொடி, கொம்பை நாடி வாழலாம். ஆனால், மனிதனுக்குச் சார்புகள் தேவை. அவன் தேடிப்பெறவேண்டிய ஒன்றும் சார்புதான். ஆயினும், சார்பையே கதியென நம்பி வாழ்வதும் சிறப்பன்று. புறச்சூழல்களையும், சார்புகளையும் கூட ஒரு மனிதன் உளமார முயன்றால் தனக்கியைந்தவாறு சீரமைத்துக்கொள்ள முடியும். ஆதலால்தான் திருவள்ளுவரும், "பொறியின்மையார்க்கும் பழியன்று” என்று எடுத்தோதுகின்றார்.

ஒரு மனிதன் தன்னுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் தன்னுடைய சார்புகளின் மீது குற்றம் சுமத்துவது அறிவும் அன்று; ஆள்வினையுமன்று; புகழும் அன்று. இந்தக் கருத்தைத்தான் நாட்டிடை வழங்கும் சாதாரணப் பழமொழி விளக்குகிறது. "ஐந்தும் உண்டானால், அறியாத பெண்ணும் கறி சமைப்பாள்" என்பது பழமொழி. அதாவது, பெண்ணின் சமையற்கலையில் திறனில்லை. சுவை தரும் பொருளனைத்தும் குறைவற இருப்பதால் அவளும் சமைத்தாள். ஐந்தில் ஒன்று குறைவாக இருந்தது. எனினும் அவள் தன் திறனால் சுவைபடச் சமைத்தாள் என்றாலே சமைத்த பெண்ணின் திறன் வெளிப்படுகிறது. அதுபோல் வேண்டிய அனைத்தும் ஒழுங்காக அமைத்துக்கொடுத்துச் செய்யச்சொல்லிப் பார்க்கட்டுமே! என்று கூறுவது ஆள்வினையன்று. இருப்பதை வைத்துக்கொண்டு தன் ஆற்றலால் சீர்பெறச் செய்வது தான் செயல்திறன் ஆகும்.

ஒரு மனிதன் தான் நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்துக்கு முதல் துணையெனக் கொள்ளத்தக்கது அவனுடைய நெஞ்சமேயாகும். ஐயோ, பாவம்! சிலருக்கு அப்படி நெஞ்சு என்று ஒரு பொருள் இருப்பதாகவே தெரியாது. சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது கடிவாளம் இல்லாத குதிரையாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மனிதன் அதை இழுத்துப் பிடித்து ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல்