பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/397

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 393


அடிமையாகிக் கிடக்கிறான். இத்தகைய மனிதன் எப்படி வாழ்க்கைக் களத்தில் போராட முடியும்? அவனுக்குக் கடமைப்பட்ட - அவனுக்கு அடங்கி ஆட்படக் கூடிய நெஞ்சமே அவனுக்குத் துணையில்லையென்றால் அவன் கெட்டுவிட்டான் என்று பொருள். அவனுக்குக் கேளிர் கிடைக்கமாட்டார்கள்; உறவினர்கள் கிடைக்கமாட்டார்கள்; நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். எனவே, வாழ்க்கையை அவன் முடித்துக்கொள்கிறான் என்பதே பொருள். ஆதலால், நெஞ்சை நன்முறையில் பழக்குக! நாள்தோறும் பழக்குக! நன்றில் நிலைநிற்கச் செய்திடுக! உற்றதுணையாக நெஞ்சத்தினைப் பெற்றிடுக! தன் நெஞ்சம் தனக்குத் துணையின்றேல் இந்த நீளுலகில் யாரும் உறவில்லை.

"அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே

நீயெமக் காகா தது"

(1291)

என்பது குறள்.

நெஞ்சமே துணை!


னிதன் ஓர் அற்புதமான படைப்பு. உலகில் மிக உயர்ந்த படைப்பும் மனிதனே! தொன்மையில் உலகத்தைப் படைத்தவர் யாரோ? ஆனால், இன்று உலகியலைப் படைப்பவன் மனிதனே! நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தப் பழைய உலகத்திற்குப் புதுப்புது வடிவம் கொடுக்கிறான். அவனுடைய ரசனை உணர்ச்சிகளின் ஆற்றல்தான் என்ன? பேசும் மொழி படைத்தான், கனிந்துருகக் கலை படைத்தான். உணர்ச்சியில் திளைத்து மகிழக் காதலும் கண்டான். உணர்ச்சியினைத் தரமுடையதாக்கவும், மேலும் மேலும் உயர்வற உயர்ந்து விளங்கவும் கடவுளைக் கண்டான்.

இத்தகு சீரும் சிறப்புமுடைய மனிதப்படைப்பில் அவனுடைய உடலும் உள்ளமும் புகழ்பெற்று