பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விளங்குகின்றன. மானிட உடம்பு கட்டையா? அப்படிச் சொல்லுபவர் உணர்ச்சியற்ற மரக்கட்டைகள்! இது புழுக் கூடா? ஐயோ, பாவம்! புண்ணியத்தின் புண்ணியமாகிய சிவன் தந்த இந்தப் புகழ்க் கூட்டை - புண்ணியத்தின் கூட்டைப் புழுக் கூடு என்னலாமோ? அதைவிடப் பாவம் வேறொன்றில்லை. கையில் ஒரு காசு கிடைத்தால் பத்திரப்படுத்துவோருங்கூட விலைமதிப்பற்ற இந்த உடலை வருத்தும் நோய்களுக்கு ஆளாக்கி, நெறி கடந்ததனைப் பயன்படுத்தி அழிக்கின்றனர். திருமந்திரம் அருளிச்செய்த திருமூலரே, "உடம்பார் அழியின் உயிரா ரழிவர்" என்றார். அதுபோதாதென்று மேலும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!" என்றார். இங்கே வளர்த்தலென்பது சதைவளர்த்தலைக் குறிப்பிடுவதன்று. உயிர்க்குக் கருவியாக உடல் கிடைத்தது. கருவி, எளிதில் தாங்குதற்குரியதாக இருந்தாலே பயன்படும். சிலர் உடம்பிற்கு உயிரின் நலமறியாது, நாவின் சுவைக்கு அடிமையாகித் தீனி நிறையத்தின்று தொங்கு சதைகளை வளர்த்துக்கொண்டிருப்பர். உயிரின் ஆற்றல் இந்தத் தொங்கு சதைகளைத் தூக்குவதிலேயே வீணாகப்போகிறது. உடலினை அலட்சியப்படுத்துதலே உயரிய பண்பென்று கருதி, "நான் அதெல்லாம் பார்ப்பதில்லை, எதையும் சாப்பிடுவேன், எப்பொழுதும் சாப்பிடுவேன்" என்று மனித உருவில் விலங்காக வாழும் வேறு சிலர் கூறுவர். இன்னும் வேறு சிலர் காலத்தில் கறங்கென இயங்கும் உலகியலைப் பார்த்தும் காலம் கருதாதவர்களாக இருக்கின்றனர். எல்லாம் வல்ல சிவபெருமான் காலங்கடந்தவர் என்பார்கள். இன்றைய மனிதகுலத்தில் பலர் காலங்கடந்தவர்கள். காலங்கடப்பதே அவர்கள் இயல்பு. கடிகாரங்கள் - மணிக் கூண்டுகள் - காலங்காட்டும் சங்கொலிகள் - இவ்வளவும் பல்கிப் பெருகியிருந்தும் இந்த உலகில் நம்மவர்களே காலங்கடத்த வல்லவர்கள். இதற்கொரு நோபல் பரிசு வைத்தால் நமது