பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/399

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 395


நாட்டு ஆளே தட்டிக்கொண்டு வருவான். சிவபெருமான் காலங்கடந்தவன் என்பதற்குப்பொருள், அவன் காலத்தைவென்று நிற்கிறான் என்பதேயாகும். காலங்கடத்தி, காலத்தைப் பயனற்றதாக்குபவன் என்பதல்ல.

ஆதலால், உடலியக்கத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் முறைப்படுத்திக் காலத்தில் செய்தல் அதிகப் பயனைத் தரும். குறிப்பாக ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்தற்குரிய ஆற்றல் வீண் போகாமல் தடுக்கலாம். இங்குத் திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்த்தல்’ என்பது உடற்கருவி பயன்படு திறனை வளர்த்தல் என்பதேயாகும். இந்த உடற்கருவி பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும் மாபெரும் தொழிற்கேந்திரங்களை உடையது. ஒன்றோடொன்று உடன் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படும் இயல்புடையது. கண் பார்த்தால் பார்வை அளவோடு நிற்பதில்லை. உடன் அறிவுப்புலன் வேலை செய்கிறது. கை, கால்களும் தேவைப்பட்டுழி வேலை செய்கின்றன. அவசியமிருந்தால் நினைவுப் புலனும் வேலை செய்யும். இங்ஙனம் கடிதில் ஒன்றோடொன்று துணைசெய்து வேலை செய்யும் பொறி புலன்களின் கூட்டுறவே இந்த உடம்பு. இந்தக் கூட்டுறவு குலையும்பொழுதே நோய் என்று சொல்கிறோம். மனித குலத்திலும் கூட்டுறவு குலைந்தால், மனிதகுலம் வளர்ந்து வாழ்வதற்குப் பதில் அழியும். எந்த ஒன்றினுடைய முதல் இலட்சியமும் கூட்டுறவாகவே இருக்கவேண்டும். ஆனால் மனிதனின் தற்பெருமை உணர்வும், தன்னல உணர்வும் கூட்டுறவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

இத்தகைய விந்தைமிகு மனிதப்படைப்புக்கு மையமாக - நினைப்பின் களமாக - உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்ணாக - சீலங்களின் பிறப்பிடமாகத் திகழ்வது நெஞ்சமேயாம். புறக்கருவிகளில் கண் எங்ஙனம் சிறந்ததோ, அதேபோல, ஏன்? அதனையும்விட நெஞ்சு சிறந்தது.