பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 399


யோர்க்குத் தன்னிடத்து அன்புடையோர் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. அதேகாலத்தில் தன்னுடைய தவறுகளைத் தெரிந்து ஒத்துக் கொள்ளும் சிறந்த குணமிருக்கும். தரத்திற் குறைந்தவர்களோ அல்லது அன்புணர்வு அற்றவர்களோ தங்களுடைய குறைகளை உணர்வதே இல்லை. மற்றவர்களுடைய குறையை மலையாக்குவர். உணர்வு கலந்த உறவு வளர்ச்சிக்கு, மற்றவர் குற்றம் பார்க்கும் குணம் கூடாது. அதேபோழ்து தன் குற்றத்தை உணரும் ஆற்றலிருக்க வேண்டும். யாதொரு சிறப்பும் இல்லாத குற்றங்களுடைய நம்மிடத்திலேயே இவ்வளவு அன்பைக் காட்டுகிறார்களே என்று உணரும் பொழுதுதான் அடக்கம் முகிழ்க்கிறது; அன்பு வளர்கிறது; இன்பம் கால்கொள்ளுகிறது; இத்தகு இயல்புடையவர்களிடையில் பிணங்குதல் ஏற்பட்டாலும் அதுவும் இன்பமே.

உறவுடையவர்கள் இன்னாமையைச் செய்தாலும் அஃதின்பமே யென்று, குறுந்தொகை பேசுகிறது. உறவுடையார் செய்வனவற்றுள் சில இன்னாதனவாகத் தோன்றினும், அவை முடிவில் இனியனவாகவே முடியும். காரணம், இனியனாக இருப்பவர். இன்னாதன செய்வதால் அந்தத் துன்பம் நிரந்தரமானதன்று. உறவுடையார் செய்யும் துன்பம் இனிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகவும் இருக்கலாம். வரம்பிகந்து போகாமல் விதிக்கும் தடையாகவும் இருக்கலாம். புலன்களையும் உணர்வுகளையும் வளர்த்துச் செழுமைப்படுத்தவும் இன்னாதன செய்யலாம். ஆதலால், இனிய இயல்புடையோர் செய்யும் துன்பமும் இன்பமேயாம்.

                     "இனிய னாகலின் இனத்தி னியன்ற
                      இன்னா மையினும் இனிதோ
                      இனிதெனப் படுஉம் புத்தேன் நாடே."

என்பது குறுந்தொகை.