பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 37


திருக்குறட் காலம் முடியாட்சிக் காலம். அதனால், திருக்குறளில் படை', 'அரண்' பேசப் பெற்றுள்ளன. திருக்குறள் ஆட்சி சமூக நலன் பேணும் குடியாட்சியாதலாலும், உலக முழுவதும் இந்த ஆட்சியே அமைய வேண்டும் என்பதாலும் திருக்குறட் சமுதாயம் படை வலிமையைப் பெருக்காது. அதுபோலவே, எந்தவொரு நாடும் படை வலிமை பெறாதபடி போராடும். அவசரத் தேவைக்கு மக்கள் குலத்துக்குப் பாதுகாப்பாகப் பொதுவான படையை - வலிமையான படையை அமைத்துக் கொள்ளத் துணை செய்யும்; அதற்காகத் தொடர்ந்து போராடும்.

திருக்குறள் ஆட்சி, ஒவ்வொருவரும் மூன்று மொழி கற்பதை வலியுறுத்தும். தாய்மொழி, நாட்டுமொழி, உலகப் பொது மொழி என்பவை அவை. ஐ.நா. பேரவை உலகப் பொதுமொழி ஒன்றைத் தேர்வு செய்யவேண்டும், இந்த உலகப் பொதுமொழியை உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் கட்டாயமாகப் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும். விருப்பமுடையவர்கள் அறிவு வளர்நிலையில் வரையாது கற்கலாம்.

பிறப்பினால் எல்லாரும் ஒத்த நிலையினர்; ஒரே உரிமை உடையவர்கள். சிலர், தனித்திறன்கள் பெற்றிருந்தாலும் அவற்றுக்கெனத் தனி உரிமை ஏதும் இல்லை. எல்லாருக்கும் கல்வி; உழைப்பாளர்க்கு உயர்வு: தாழ்விலாச் செல்வர் பலர் ஆவது; மலரினும் மெல்லிய காமம் கலந்து மகிழும் வீடுகள்; பிறை வளர்வது போன்ற நட்பு: முறை கெடாது காவல் புரியும் அரசு; செந்தண்மை பூண்டொழுகும் அத்தண்மை முதலியன கொண்ட சமுதாய அமைப்பே திருக்குறட் சமுதாய அமைப்பு.

இத்தகைய சமுதாயத்தை அமைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து பணி செய்வதென்று திருக்குறள் பேரவை உறுதி கொள்கிறது.