பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியில் செலுத்தித் திறம்பட வாழ்தல் என்பதே கருத்து. எல்லாரும் உடல் தாங்கி உலா வரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். ஆனாலும் அவர்கள் எல்லாரும் வாழ்பவர்கள் அல்லர். “வாழ்கின்றாய், வாழாத நெஞ்சமே!” என்ற மாணிக்கவாசகர் அருள்வாக்கிற்கு ஏற்ப வாழாதவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் பலர் வாழ்கின்றவர்கள் என்று கணக்கெடுத்தால் ஆயிரத்தில் ஒருவர்கூடக் கிடைத்தல் அரிது. வாழ்கின்றவர்கள் புவியை நடத்துவார்கள்: பொதுவில் நடத்துவார்கள்; போர்க்குணம் உடையவர்களாக இருப்பார்கள். ஓயாது ஒழியாது நலம் செய்வார்கள். நன்றே செய்வார்கள்; காலத்தை வென்று விளங்குவார்கள். இவர்கள் பூமிமேல் புகழத் தக்கவர்கள். புகழ்பட வாழும் நெறி திருக்குறள் நெறி.

மனிதன் சாதாரணமாகத்தான் பிறக்கிறான். ஆயினும் அவனுடைய வளர்ச்சிக்குரிய கருவிகள் - வாயில்கள் ஏராளம்; “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று தேவாரம் கூறும். மானுடம் வளர, வாழத் திருவள்ளுவர் காட்டும் நெறி கற்கும் நெறி! ஆம்! ‘கற்க’ என்றார் திருவள்ளுவர். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து கற்கவேண்டும். கற்ற நூலின் கருத்துக்களை அசைபோட்டு ஜீரணித்து அறிவாக்க வேண்டும். அறிவினைச் செயலாக்க வேண்டும். அறிவுடையார்க்கு அழகு “என்ன தெரியும்” என்பதல்ல; “என்ன செய்யத் தெரியும்” என்பது தான், அதனால் திருவள்ளுவர் அறிவைச் செயலுடன் தொடர்புடைய கருவியாக்கினார். “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார். கருவி என்றால் Instrument என்பது பொருள். துன்பமும் துயரும் இயற்கையுமல்ல நிலையானவையுமல்ல. அறிவினைக் கருவியாகக் கொண்டு துன்பத்தினை வெல்ல வேண்டும். நல்ல நிறைவான - பாதுகாப்பான - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அறிவு கருவியாகப் பயன்படுதல்வேண்டும். அறிவைக் கருவியாகக் கொண்டு