பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 41


பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் திருவள்ளுவர் காட்டும் நெறி, அறிவு இருக்கிறது. அறிவைக் கருவியாகவும் அறிந்திருக்கிறோம். ஆனால் அறிவைக் கருவியாகப் பயன்படுத்த, வாழ்க்கையை இயக்க உந்து சக்தி ஒன்று வேண்டுமே, அந்த உந்து சக்தி எது?

அந்த உந்து சக்திதான் ஊக்கம். ஊக்கம் உள்ளத்தைச் சார்ந்தது. சோர்வும், பயமும் ஊக்கத்திற்குப் பகை. “உள்ளம் உடைமை உடைமை” என்றார் திருவள்ளுவர். உள்ளம், ஊக்கத்தின் களமாதலால் உள்ளத்தையே ஊக்கம் என்றார். ஊக்கம் என்பது ஒரு நுண்ணுணர்வு. ஊக்கத்தின் வெளிப்பாடு முயற்சி; உழைப்பு. திருவள்ளுவர் முயற்சியை “ஆள்வினை” என்று குறிப்பிடுகிறார். ‘அறிவறிந்த ஆள்வினை’ என்பது திருக்குறள். ‘அறிவறிந்த ஆள்வினை’ என்று கூறியதால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் என்று பொருள் படுகிறது. அறிவறிந்த ஆள்வினையே ஆகூழ். அறிவறிந்த ஆள்வினையே பயன் தரும். இதுவே திருவள்ளுவர் நெறி!

வாழ்க்கையின் இயக்கம் நுகர்வுப் பொருள்களாலாகியது. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருக்குறள் கூறுகிறது. இந்த உலகியலில் “கடவுள் முதல்”, “கருத்து முதல்”, “பொருள் முதல்” என்ற தத்துவங்கள் பயிலப்படுகின்றன. இவற்றுள் திருக்குறள் பொருள் முதல் வாதத்தைச் சார்ந்தது என்று எண்ண இடமளிக்கிறது. “பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை” என்பதால் பொருளைச் சார்ந்தே வாழ்வியல் அமைகிறது. உடலோடு கூடிய உயிர் வாழ்க்கை இயங்க வேண்டுமாயின் நுகர் பொருள் தேவை. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்று பிறரும் கூறுவர். திருக்குறள் “செய்க பொருளை” என்று கூறுகிறது.

“யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும், போகமும் அல்ல” என்ற பரிபாடல் வரி, ‘பொன்’ வேறு