பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்த ஏதாவது ஒரு நன்மையை நினைத்துக் கொள்! அந்த நினைப்பு கொடுமை செய்வார் மாட்டு, அன்பைக் காட்டத் தூண்டும்; பகையை மாற்றும்; பண்பாடு வளரும். இத்தகு வாழ்வே மானுடத்தில் சிறந்த வாழ்வு. சால்பு மிகுதியும் உடைய வாழ்வு.

திருவள்ளுவர் நெறி எளிதானது; ஆனாலும் அருமையானது. திருவள்ளுவர் நெறியில் இந்த வையகம் நடை போடுமானால் இன்று இந்த உலகத்தை வருத்தும் துன்பங்கள் அனைத்தும் அகலும்; அன்பு வளரும்; அறம் வளரும்; பண்பாடு வளரும்; இந்த உலகமும் இடையீடின்றி இயங்கும்; இந்த உலகம் அழியாது என்றும் நிலைபெற்று விளங்கும்.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

(996)

என்றும் திருக்குறள் கூறுகிறது. திருவள்ளுவர் நெறி மானுடத்திற்கு நிலையான வாழ்வளிக்கும் நெறியுங்கூட! திருவள்ளுவர் நெறி மண்ணில் விண்ணகத்தைப் படைத்துக் காட்டும் நெறி! உலகப் பொது நெறி!