பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பல உண்டு. அந்நூல்கள் செயல்களைப் பற்றி என்ன சொல்லியிருந்தாலும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் உலக நடைமுறையினை அறிந்தே செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் ஐயத்திற்கு இடமின்றிக் கூறுகின்றார்.

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”

(637)

என்பது திருக்குறள். அதனால் திருவள்ளுவர் உலகமாகிய சமுதாயத்திற்கு அளித்த மாட்சிமை உணரப்படுகிறது.

திருவள்ளுவர் மாந்த உயிரினத்தில் வேறுபாடே பாராட்டவில்லை; இன்றைய உலக நாடுகள் சபை வலியுறுத்தும் மனித உரிமைகளை அன்றே வலியுறுத்தியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூஸோ, “மனிதன் பிறக்கும் பொழுது சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால் அவன் பிறந்து வளரும் பொழுது நூற்றுக்கணக்கான விலங்குகளை மாட்டிக் கொள்கிறான்” என்று கூறுகிறார். திருவள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் எல்லாரும் சம உரிமை உடையவர்கள் என்று கூறுகின்றார். ஒரோ வழி செய் தொழிலின் வேற்றுமைகளால் அல்லது அறிவால் திறமையானவர்கள் சிலர் இருந்தாலும் அந்தச் சிறந்த இயல்புகள் எல்லாம் சமூக அமைப்பின் வழி ஒருவருக்குக் கிடைத்த பரிசுகளே யாம். இதனை,

“மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு”

(454)

என்று கூறி விளக்குகின்றார் திருவள்ளுவர். அதன் காரணமாக, அதாவது சிறப்புத் தகுதிகள் பெற்றிருப்பதன் காரணமாகத் தனித் தகுதிகள் அல்லது உயர்வுகள் கிடையாது என்று மறுக்கின்றார். இஃது ஒரு தீவிரமான தனித் தன்மையுடைய கருத்து. தெருக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளியும் கோயிலில் பூசை வைப்போனும் ஒத்த