பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 81



நாடாளும் அரசனைச் சுற்றிப் பலரும் சூழ்வர். பலரும் பலவும் கூறுவர். அவை யெல்லாவற்றையும் அரசன் கேட்டுத்தான் ஆக வேண்டும்; மறுக்க இயலாது; மறுக்கக் கூடாது. ஆயினும் கேட்டவற்றையெல்லாம் நம்பாமல், கேட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் உண்மையை ஓர்ந்துணர வேண்டும். இது அரசனின் பொறுப்பு; கடமை.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”.

(423)

நாடாளும் அரசன் அண்டை அயலிலுள்ள அரசுகளுடன் நட்புப் பேணவேண்டும். அங்ஙனம் கொண்ட நட்பை அளவற்ற நிலையில் மலர்தலும் குவிதலும் இல்லாமல் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

உலகந் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

(425)

“நாடாளும் அரசன் அன்றாடம் உலகத்தின் நடைமுறையைப் புரிந்து கொண்டு அந்த உலக நடைமுறைக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும்” என்றும் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

நாடாளும் அரசன் அரசின் பொருள் வளத்தை நாளும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அரசன் தனது பொருள் வருவாய்க்கு ஒரே வழியை நம்பிக் கொண்டிருத்தலாகாது. புதிய புதிய வழிகளைக் கண்டாக வேண்டும். பழைய வருவாயையும் புதிய வருவாயையும் பிழையின்றி ஈட்டுதல் வேண்டும். அங்ஙனம் ஈட்டிய செல்வத்தை - முதலை மூலதனம் ஆகக்கூடிய அளவுக்குக் காக்க வேண்டும். அச்செல்வத்தைப் பல்வேறு நல்ல காரியங்களுக்கு - மக்களுக்குப் பயன்படும் காரியங்களுக்குச் செலவிட வேண்டும் என்பது திருவள்ளுவர் கண்ட அரசின் பொருளாதாரம். தி.6.