பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

(385)

நாடாளும் அரசன் குற்றங்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இந்தக் கருத்தில் எல்லா அரசியல் ஞானிகளும் ஒத்த கருத்து உடையவர்கள். ஒரோவழி, அரசனுக்குக் காதல் ஏற்படுமாயினும் அந்தக் காதல் அனுபவத்தைக் கூடப் பிறர் அறியாமல் அனுபவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

நாடாளும் அரசன் குற்றமற்றவனாக இருப்பின் மக்களும் குற்றமற்றவர்களாக இருப்பார்கள். அரசன் தனது குற்றங்களை நீக்கிக் கொள்ளாமல் மக்களிடத்தில் குற்றங்களைக் காணலும் தண்டித்தலும் ஆகாது, கூடாது என்பது திருவள்ளுவரின் அரசியல் கோட்பாடு. குற்றம் செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆயினும் குற்றம் திருந்துவதற்குத் தண்டனையே தவிர, ஒறுத்துத் துன்பம் தருவதற்கு அல்ல.

“கடிதோச்சி மெல்ல எறிக” என்பார் திருவள்ளுவர். மேலும் “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்” என்பார். கண்ணோட்டம் என்பது பழகினவரிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மறுத்தற்கு இயலாமல் மீண்டும் பழகுவது; தொடர்ந்து பழகுவது.

விரிந்து பரந்த நாடாகவும் மக்கள் தொகை கூடுதலாகவும் உள்ள நாட்டையுடைய அரசனுக்கு ஒற்றர் தேவை. திருவள்ளுவரின் அரசு நெறியில் ஒற்றர்நிலை பன்முகப்படுத்தப் பெற்றது. திருவள்ளுவர் அரசியலில் நாட்டுநிலை பற்றி அறிந்து கூறுதலும் ஒற்றன் பணியாம். அதுபோலவே நண்பர்களின் நடைமுறை, பகைவர்களின் நடைமுறை முதலியவற்றையும் அறிந்து அரசனுக்கு அவ்வப்போது தெரிவித்தலும் ஒற்றர்களின் கடமை. அதனால்