பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 87


பொருளை ஈட்டிச் சேமித்து உண்டும் உதவி செய்தும் வாழாதார் செத்த பிறகு என் செய்வர்? ஓர் இளம் பெண், கன்னிப் பெண்; எழில் நலம் மிக்குடையவள்; திருமணமின்றித் தனியே மூத்து முதுமையானது போன்றது அச்செல்வம். நாலு பேரால் நண்ணி அனுபவிக்கப் பெறாத செல்வம், நச்சப்படாத செல்வம் நடுவூருள் பழுத்த நச்சு மரம் ஒத்தது.

திருவள்ளுவர் காட்டும் சமுதாயத்தில் சிறியன சிந்திக்கவும், சின்னத்தனமான காரியங்கள் செய்யவும் நாணுவர். அதாவது வெட்கப்படுவர். உடை, உணவு, இனப் பெருக்கம் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. சிறப்புடைய மாந்தருக்கு நாணமே பெரிது. நாணமற்றோர் மரப்பாவை யனையர். இது திருக்குறள்.

திருவள்ளுவர் சமுதாயச் சிந்தனையாளர். ஒப்புரவு நெறி நின்று ஒழுகித் தாம் பிறந்த குடியை மேம்பாடு செய்து வளப்படுத்துவதில் நற்குடிப் பிறந்தார் ஈடுபடுவர். பிறந்து வளர்ந்த குடியை மேம்பாடுறச் செய்பவருக்குத் தெய்வமும் துணை செய்யும். தாம் பிறந்த குடியை மேம்பாடுறச் செய்ய விரும்புபவ்ர்கள் "இன்று நன்று, நாளை நன்று" என்று காலம் கடத்தமாட்டார்கள். நாள் பார்த்துக் கடமைகளை ஒத்திப் போடுதல் சோம்பேறித்தனத்தில் கொண்டு போய்விடும். சோம்பேறிகள்தான் சமூகத்தின் மதிப்பு - அவமதிப்பு பார்ப்பார்கள். தாம் பிறந்த குடியை மேம்பாடுறச் செய்பவர்கள் மதிப்பு - அவமதிப்பு பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தாம் பிறந்த குடியை ஆளாக்குதலே அவர்தம் குறிக்கோள். ஒரே குறிக்கோள்!

“குடிசெய்வார்க் கில்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

(1028)

என்பது குறள்.