பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மைய அரசுகள் பல திட்டங்கள் தீட்டின. ஆனால் அந்தத் திட்டங்களைப் பல மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை; சிலர் முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டனர். கிராமப் புற மக்களின் மனோநிலை - குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள் மாறினால்தான் கிராமப்புற வறுமை அகலும்! கிராமப்புற மக்களுக்கு வாழ்வியல் சார்ந்த அறிவியல், பொருளியல் அறிமுகப்படுத்தப்படவேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர்கள் “தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; எளிதில் கேட்கமாட்டார்கள். ஆனாலும் போராடியாக வேண்டும். இது படித்த மனச்சாட்சியுடையோரின் கடமை.

வறுமைக்குப் பசி பயப்படுமா? வறுமையின் காரணமாக வயிற்றுப் பசி வராதா? உடலில் உயிர் உள்ள வரை பசிப்பிணி யகலாது. வயிற்றில் பசி. வீட்டில் வறுமை! என்ன செய்வான்? பிச்சையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் ‘நல்குரவு’ அதிகாரத்தைத் தொடர்ந்து ‘இரவு’ அதிகாரம் வைத்தார். இரந்து வாழ்தல் ஒரு வாழ்வா?

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

(1062)

என்றது திருக்குறள். ஆனால் திருவள்ளுவர் இரத்தலையும் முழுமையாக விலக்கிப் பேசாதது ஏன் என்பது ஆய்வுக்குரிய செய்தி. மானுட வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் இரத்தல் வராமல் போகாது என்று எண்ணினாரா? அங்ங்ணமாயின் வறுமை காரணமாக இல்லாமல் பிற காரணங்களுக்காக ஒருவரிடம் கேட்டுப் பெறுதலை இரத்தல் என்று கூறுவானேன்? உதவிக்குள் அதனை அடக்கக் கூடாதா? அறிஞர்கள் ஆராய்க. இரவு அதிகாரத்தில் இரவின் இழிவையே திருவள்ளுவர் கூறவில்லை. அதற்கு மாறாக “ஈவான்ரப் பார்த்து இரக்க!” என்றும் “கரப்பாரிடம்