பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

99






மார்ச் 23


இறைவா, ஐவர்களிடமிருந்து காப்பாற்று, அறிவை விருத்தி செய்!


இறைவா! என்னை எவ்வளவு பெரிய உப்பரிகையில் உட்கார வைத்தாய். ஆனால் நான் அங்கே இருக்க முடிகிறதா? என்னுடைய பொறிகள் இருக்க விடுகின்றனவா? ஒத்தநோக்கம் இல்லாத ஐம்பொறிகளோடு எனக்குக் கூட்டு வைத்தாயே. இறைவா! அந்த ஐவர்கள் என்னோடு தொடர்ந்து போராடுகிறார்கள். பல சமயங்களில் அவர்களே வலிமையுடையோராகி விடுகின்றனர்.

இறைவா! ஏன் இந்த நிலை? உனக்கு ஏன் இந்த நாச வேலை. இறைவா! ஆம் இறைவா, ஐவரையும் அடக்க அறிவைக் கொடுத்திருக்கிறாய். ஆம் இறைவா அறிவைக் கொடுத்திருக்கிறாய். எனது அறிவும் நயப்புகளுக்கு இரையாகி விடுகிறது. பல சமயங்களில் அறிவு சுயேச்சையாகவே வேலை செய்வதில்லை. இறைவா! அது மட்டுமா? குறைகளை நிறைகளாகவும், அநியாயங்களை-நியாயங்களாகவும் அது காட்டும் திறமையை வியப்பதற்கு ஏதுமனம்?

அம்மம்ம! இறைவா! கீழே விழுந்து கிடப்பதற்கும் இந்த மனம் கற்பிக்கும் சமாதானங்கள் அளப்பில. இறைவா! என்னைக் காப்பாற்று. ஐவர்களிடமிருந்து காப்பாற்று, அறிவை விருத்தி செய்!