பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை

முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழூர்.

அடிகளார் என்று தமிழகத்தில் சொன்னால் குன்றக்குடி அடிகளாரை மட்டுமே குறிக்கும். பட்டித்தொட்டிகளில் எல்லாம், தமிழர் வாழும் உலக நாடுகளில் எல்லாம் அடிகளார் சென்று பேசியிருப்பார். அடிகளாரை அறியாத தமிழர் இருக்க இயலாது. அடிகளார் எல்லாத் தமிழ் நெஞ்சங்களிலும், குடிகொண்டு இருப்பவர். துறவிகளில் தனித்தன்மை உடையவர். இவரைப்போன்ற துறவியை எங்கும் காண இயலாது.

அடிகளார் ஒரு சிந்தனைச் சிற்பி. சமுதாயச் சிற்பி.சமுதாயத்தில் பல மாற்றங்களைச் செய்யவிரும்பியவர். அவர் வாழ்நாள் முழுவதும் சமுதாயத்தொண்டு செய்தவர். அருள்நெறி திருக்கூட்டம், திருக்குறள் பேரவை போன்றவற்றைத் தொடங்கி தமிழகம் முழுவதும் திருக்குறளைப் பரப்பியவர். பேச்சாற்றலில் வல்லவர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அவர் எழுத்தாற்றலிலும் வல்லவர் என்பதை அவருடைய எழுத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவர் எழுதியவைகளைப் பல தொகுதிகளாக மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

அடிகளாரின் பத்தாவது தொகுதியாகிய திருவருட் சிந்தனை என்ற நூலுக்கு அணிந்துரை தரவேண்டும் என்று அடிகளாரின் வழித்தோன்றல் பொன்னம்பல அடிகளார் விரும்பியதாகக் கூறி அத்தொகுதியை என்னிடம் தந்தனர். அப்போது நான் 10-ஆவது ஆளாகத்தான் நினைக்கப் பெற்றேனா? என்று சிந்தித்தேன். அதில் கூட ஒரு சிறப்பு இருக்கிறது. அடிகளாரே அதை எழுதுகிறார்.

“இறைவா நான் பூஜ்யமாகி உன் பொன்னடி போற்றும் வாழ்வினை அருள்க” (ஜனவரி - 8)

இறைவா! கணக்கில் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு. ஆம், இறைவா. ஒரு சாதாரண பூஜ்யம் ஒன்றுக்குப்பின் வருமானால் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுகிறது. நான் ஒரு பூஜ்யமானாலும், உனக்குப் பின்னால் நின்றால் எவ்வளவு மதிப்பு பெருமை, ஆம், இறைவா அருள் கூர்ந்து நீ எப்போதும் எனக்கு - முன்னால் இடக்கைப்புறமாக நின்றருள் செய். உன்னைச் சார்ந்து உன்