பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆணைகள் சமய உலகத்தில் செயற்படுத்தவில்லை. தீண்டாமை விலக்குப் பணியில் புகைவண்டி கண்ட அளவுக்கு வெற்றியை நமது சமய நிறுவனங்கள் அடையவில்லை; அடைய முயலவும் இல்லை. இது வேதனைக்குரிய செய்தி. தீண்டாமையை நமது சமயத்தில் இருந்து அறவே அகற்றிக் கோடானு கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத் தவறி விடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத் தவறியவர்களாவோம்” என்று சமய உலகத்தை உண்மையான ஆன்ம பரிசோதனைக்குத் தயார்படுத்துகின்றார்கள்.

அடிகள் பெருமானின் மலேசியச் சொற்பொழிவு நம்மை மிக ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றது. அடிகள் பெருமான் தங்கியிருந்த பயணியர் மாளிகைக் கடிகாரம் ஒடுகின்ற சப்தம் கேட்கின்றது. பெண்டுலம் ஆடி அசைகின்றது. முள் நகர்ந்த பாடில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வுதான்! ஆனால் இதை வாழ்க்கைப் போக்கோடு ஒத்துப் பார்ப்பதுதான் அடிகள் பெருமானின் தனிச் சிறப்பு, பெண்டுலம் அசைந்தும் முள் நகராத கடிகாரம் போல, நம் நாட்டில் வழிபாடுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. வாழ்க்கையை நெறிகளிலே மட்டும் நகர்த்தத் தவறிவிடுகின்றோம். காரணம் நம்முடைய இதயத்தில் அதனுடைய உணர்வுகள் பதிவதில்லை” என்ற சிந்தனை மறுக்க முடியாதது.

"விண்ணோர்கள் அமுதுண்டு சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்!"

என்றார் இளங்கோவடிகள். இது நமக்குத் தெரிந்த கதைதான், தேவர்களும் அசுரர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடையும் பொழுது அமுதம் தோன்றவில்லை. ஆலகால விடம்தான் தோன்றுகின்றது. விடத்தை உண்ண எவரும் தயாராய் இல்லை, விடத்தை உண்டும் இறைவன் ஜீவிக்கின்றான். இறைவன் என்ற ஒரே காரணத்தால் மட்டும்