பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 13


ஒரே மனத்துடன் சிறந்த கூட்டுறவாளனாக வாழ அருள்க!


இறைவா, மூவர் தலைவனாய் விளங்கும் முதல்வா! எந்த உலகத்திலும் முழுமையான ஒருமைப்பாடு இல்லை. இறைவா, அமரர் உலகத்திலும் ஆயிரம் ஆயிரம் சண்டைகள், மானிட சாதியில் கேட்கவே வேண்டாம். கூடி வாழ்தல் என்பது இயற்கை வாழ்வு.

கூட்டுறவுப் பண்பு இயற்கைப் பண்பு. அன்பில் தழைக்கும் பண்பு; பிறர்க்கென முயலும் நோன்பில் உருவாகும் பண்பு; ஒப்புரவறிந்து ஒழுகும் உயரிய ஒழுக்கமே கூட்டுறவுப் பண்பு. இறைவா, வையகத்தில் கூட்டுறவு செழித்து வளர அருள் செய்க!

கூட்டுறவு வாழ்க்கை, சீலம் செறிந்த வாழ்க்கை இறைவா, பலர் கூடினால் கூட்டுறவாகிவிடாது. பலர் ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதால் கூட்டுறவாகிவிடாது. ஒரே சிந்தனை வேண்டும். ஒரே மனம் வேண்டும்! இறைவா, நடக்கின்ற காரியமா? பலருக்கு மனமே இருக்கிறதா என்பது ஐயப்பாடு.

பலர் சிந்திப்பதில்லை. இல்லை! சிந்திக்கவே மறுக்கின்றனர். இறைவா, இந்தச் சூழ்நிலையில், பலர் விரும்பு வதையே நான் விரும்பினால் ஒரே மனம் வந்து விடுகிறது. மனத்தின் தொடர்ச்சியாகச் சிந்தனையும் வந்து விடும்.

இறைவா, நாங்கள் சிலராவது ஒரே மனம், ஒரே சிந்தனை உடையவர்களாக வாழ்ந்திட அருள் செய்க! எங்களுக்கு ஒரே மனத்தினை வழங்கியருள்க! ஒரே சிந்தனையை அருள் செய்க! நான் ஒரு சிறந்த கூட்டுறவாளனாக வாழ அருள் செய்க!