பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





பிப்ரவரி 17


உனக்கும் - உன் உலகத்திற்கும் ஆட்செய்ய அருள் செய்க!


இறைவா, பற்று கூடாது என்று சொல்கின்றனர். உன்னிடத்திலும் பற்று கூடாதா? உன்னிடம் பற்று இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்? இல்லை, இல்லை, இறைவா! உன்மீது பற்று கொள்ளலாம். தவறில்லை. ஏன், உன் மீதுள்ள பற்றினால் உயிர்க் குலத்திற்குத் தீமை இல்லை. எனக்கும் தீமை இல்லை, நன்மையேயாம். ஆனால் இறைவா, உனக்குத் தொல்லைதான். பற்று என்பது முற்றிலும் தற்சார்பானது; தனக்கு நலம் நாடி அதற்காகப் பிறிதொன்றின் மீது பற்று வைப்பது. உன் மீதும் எனக்குப் பற்று வேண்டாம். ஆனால் உன்னை விரும்புகிறேன். எனக்காக அல்ல உனக்காகவே, உனக்கே ஆட்செய்ய விரும்புகிறேன். இறைவா அருள் செய்க! உனக்கே தொழும்பாய்க் கிடந்து-உனக்கும் உன் உலகத்திற்கும் ஆட்செய்ய அருள் செய்க!