பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலாவில் எய்த்துக் களைத்துழி உடலினைக் களைந்து புத்துடலைப் பெறுவதை இறப்பு-பிறப்பு என்று குறிப்பிடுகிறது நமது சமயம். உயிர்க்குப் பிறப்பு இறப்பு இல்லை; அது நிலையானது என்பதனைத் திருவள்ளுவர் ‘மன்னுயிர்’ என்பதன் மூலம் விளக்குகிறார். களைத்த உடலை விட்டுப் புது உடலைப் பெறுவதுதான் இறப்பு-பிறப்பு! புறநானூறு,

“சாதலும் புதுவன்றோ”[1] அதனையே திருவள்ளுவர்,

என்று கூறிவிளக்கும்

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு[2]

என்று கூறி விளக்குகிறார். அன்றாட உடற்களைப்பு நீங்க உறங்குதல் வழி. ஆனாலும் அவ்வப்பொழுது உறங்கும் உறக்கத்தில் முழுமையாகக் களைப்பு நீங்கிவிடுவதில்லை. காலத்திற்குக் காலம் களைப்பு முதிர்ந்து உடலுக்கு முதுமையைத் தந்து, களைப்பு மிக்குழி அறவே உடலை உயிர் உதிர்த்து விடுதலே இறப்பு: அது புதிய உடலைப் பெறுதல் பிறப்பு. இதுவே நமது சமயக் கொள்கை. இங்ஙனம் சாதலும் பிறத்தலும் எல்லையின்றிச் சுற்றி வருமா? வராது. உயிர் நிறைநலம் பெற்றுழி அதற்குப் பிறப்பில்லை; இன்ப அன்பில் அமைதியாகத் தங்குகிறது. அதுவே இறைநிலை; உயிரின் இலட்சியம்.

அறியாமை

மனிதன், இயல்பில் குறையுடைய வனாயிருக்கின்றான். மனிதனுடைய குறைகளில் தலையாயது அறியாமை. அறியாமைதான் எல்லாக் குற்றங்களுக்கும் முதலாக இருப்பது. அறியாமை, மயக்கும்; பொருளல்லவற்றைப் பொருளென்று போற்றச் செய்யும்; துன்பத்தை இன்பமாகக் கருதச் செய்யும்; பெரியோரைப் பகைவராகக் கொள்ளச் செய்யும்; சிற்றினத்தாரை நட்பாகக் கொள்ளத்துரண்டும். அம்மம்ம! அறியாமை செய்யும் தீமையைப் பகைவனாற்

  1. புறம்-192.
  2. திருக்குறள்-339.