பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

103


கூடச் செய்ய இயலாது ஆதலால், திருவள்ளுவர் முதலில் மனிதனை அறியாமையிலிருந்து விலகுக என்று அறிவுறுத்துகிறார்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு[1]

இது வள்ளுவர் வாய்மொழி.

புல்லறிவாண்மை

அறியாமையைக் கூட ஒரோவழி மன்னிக்கலாம். ஆனால் அறியாமையை அறிவு என்று நம்பி இறுமாத்தலாகிய புல்லறிவாண்மை மிகமிகக் கொடியது. அறியாமையுடையோர் திருந்த வாய்ப்புண்டு. காரணம் தாம் அறியாமை யுடையோம் என்று அவர்கள் அறிவதால். புல்லறிவாண்மை யுடையோன் திருந்துதல் அரிது. ஏன், திருந்தவே முடியாது. அவன் ‘அறிவுடையோம்’ என்ற இறுமாப்பால் ஏவவும் செய்யான்; அவனும் தேறான். அப்பரடிகள் கூறியதைப் போல் உலைப்பானையிலுள்ள இளஞ்சூட்டு நீரில் மகிழ்ந்து ஆடும் ஆமையைப் போல, அவன் மகிழ்ந்து ஆடுகின்றான்.[2] புல்லறிவாண்மை, அறியாமை நீக்கத்திற்கே தடையாகப் போய்விடும். புல்லறிவாண்மை அறிவின் வாயிலை அடைத்துவிடும். உலகமே திரண்டு கூறினாலும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். அவனை உலகத்துப் பேய் என்பார் திருவள்ளுவர். அறியாமை அதனை உடையவனுக்கு மட்டுமே தீமை செய்யும். புல்லறிவாண்மை பேயைப் போலச் சமுதாயத்திற்கே தீங்கு செய்யும். ஆதலால் புல்லறிவாண்மை முற்றாகக் கடியப்பெறுதல் வேண்டுமென்பது திருவள்ளுவர் கருதது.

கல்வி

அறியாமை அகன்று - புல்லறிவாண்மை போய் மனிதன் விளக்கமுற உதவி செய்யும் வாயில் கல்வியே.

  1. திருக்குறள், 358.
  2. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 769.