பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதன், மனிதனாக விளங்கத் துணைசெய்யும் முதல் வாயில் கல்வி. அதனாலன்றோ அப்பரடிகள்,

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னை[1]

-என்றும் திருமூலர்.

கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே[2]

என்றும் கூறிப்போந்தனர். ஞான நூல்களைக் கற்றலே “வேள்வி” என்று அறநூல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர் கல்வியை ஓர் இயக்கமாகவே வற்புறுத்துகிறார். “கற்க!” என்பது அவராணை. ஆம்;. உடல்நலத்துக்குரிய உணவு உண்பது மனித குலத்திற்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், உயிர் நலத்திற்குரிய நூல்களைக் கற்பது இன்னும் பலருக்கு வழக்கமாகவில்லை. உலக மானிடச் சமுதாயத்தில் கற்றவர் விழுக்காடு சற்றேறக்குறைய ஐம்பதேயாம். இந்த ஐம்பது விழுக்காடும்கூட, கற்கும் முறையைக் கற்றவர்களேயாம். கல்வியைக் கற்றவர்கள்-கற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு இருந்தாலே அரிது. மனிதன் ஓயாது கற்கவேண்டும்; ஒவ்வொருநாளும் கற்க வேண்டுமென்பதை,

என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு[3]

என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.

கசடறக் கற்க

கற்கும் ஆர்வம் தலைப்பட்டு முயற்சி தோன்றியவுடன், கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுட்பமான கலை, ஒரு மனிதனின் முன்னேற்றம் அவன் கற்பதற்குத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்திலேயே அடங்கியிருக்கிறது. இன்று வாழும் மானிடர் பலருக்கு இந்தக் கலை கைவந்ததில்லை. தாம் கற்பதற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் அமைந்துள்ள மனக் குற்றங்களை

  1. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 839.
  2. திருமந்திரம், 299
  3. திருக்குறள், 397.