பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செவிகளை இரந்து வேண்டுவார். திருஞானசம்பந்தர் “கற்றல் கேட்டலுடையார் பெரியார்”[1] என்பார்.

எண்ணம்

கற்றலும் கேட்டலும் மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் சிறப்புடைய பழக்கங்கள். ஆயினும் கற்ற - கேட்ட செய்திகளை எண்ணத்தில் தேக்கி உணர்வுகளாக மாற்ற வேண்டும். “எண்ணம் போல் வாழ்வு” என்பது பழமொழி. எண்ணம் ஆழமானதாக இருக்கவேண்டும். ஒப்புக்காக எண்ணுவது பயன்தராது. செயல்களின் வெற்றிக்கு எண்ணமே அடிப்படை எண்ணாமல் செய்யும் செயல் வெற்றியையும் தராது; பயனையும் தராது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்[2]

என்பது திருக்குறள்.

அறிவு

கற்றாலும், கேட்டாலும், எண்ணினாலும் கூட ஒரு மனிதன் முழுமையான அறிவைப் பெற்று விடுவதில்லை. ஏன்? மேற்கூறிய அகநிலை முயற்சிகளால் அவன் அறிவின் தாழ்வாரத்திற்கே வந்து சேர்கிறான்; அவன் அறிவுடையவனாகி விடுவதில்லை. கற்ற கருத்து, செவி வழிக் கொண்ட சிந்தனை, எண்ணிய எண்ணம் இவையனைத்தும் அறிவாக உருப்பெற வாழ்க்கையிற் செயற்பாடு தேவை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி, வலுமையாகித் துணை செய்வதைப் போலக் கல்வி வாழ்க்கைப் பட்டறையில் செரிக்கப்பெற்று அறிவாகமாறி உணர்வாக உருப்பெற்று ஒழுக்கமாக வளர்ந்து துணை செய்ய வேண்டும். நீச்சல் பற்றிப் படிப்பது நீந்துகிற அறிவாகாது. மருத்துவ நூல்களைக் கற்பதால் பிணிகள் நீங்கா. கடவுளைப் பற்றிய நூல்களைக் கற்பது கடவுட்டன்மையைத் தந்து

  1. திருஞானசம்பந்தர், முதல் திருமுறை 2
  2. திருக்குறள், 666,