பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

115


உலகத்தில் எதையிழந்தாலும் திரும்பப் பெறலாம்; ஆனால் ஊக்கத்தை இழந்த மனிதன் எதையும் பெற இயலாது. கடவுளாலே கூட அவனைக் காப்பாற்றமுடியாது. “உள்ளம் உடைமை உடைமை” என்பது வள்ளுவர் வாக்கு. அடுக்கிய உடைமைகளை உடைமையெனக் கொள்ளற்க! உடைமைகளைப் படைத்திடும் ஆற்றலுடைய உள்ளமே உடைமை. உள்ளத்தை இழந்த மனிதன் உயிரை இழந்த உடம்பு போல்வான். ஊக்கமிருப்பின் தெய்வத்தால் ஆகாதவைகளையும் கூடச் சாதிக்க முடியும். ஆதலால் வையகத்தின் வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்கக் கருதும் மனிதன் ஊக்கத்தை உடைமையாகக் கொள்ள வேண்டும். அவனே ஊழை வெற்றி கொள்வான். ஊழிற்கு அடிமையாகும் கொள்கை நமது சமயத்தில் இல்லை. ஊழை மாற்றத்தானே இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊழைக் கண்டு அஞ்சற்க! ஊழின் வலிமை, முயற்சியின் முன் தூள் தூள் ஆகும், ஊழை, ஆள்வினையுடைமை வெற்றி பெறும். ஆதலால் நம்பிக்கையுடன், ஊக்கக் கிளர்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துக. இதுவே வள்ளுவர் ஆணை !

ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்[1]

என்று தேற்றி வழி நடத்துகிறார்; ஊக்கம் தந்திடும் உரைகளைத் தந்துள்ளார். தொடர்ந்து செயற்படுக; துவளாதே; என்கிறார்.

மனிதன் பணிகளைத் தொடங்க வேண்டும். அங்ஙனம் பணிகளைத் தொடங்கிச் செய்வதன் மூலம் அவன் வாழும் உலகத்தை-சூழ்நிலையை இனியதாக அமைத்துக் கொள்கிறான்; அறிவை வளர்த்துக் கொள்கிறான். பணிகளின் வழி அவன் வாழ்தலே அவன் முழுமையெய்துதற்குரிய வழி. அதனாலன்றோ,

என் கடன் பணிசெய்து கிடப்பதே[2]

என்றார் அப்பரடிகள்.

  1. திருக்குறள், 620.
  2. திருநாவுக்கரசர், ஐந்தாந்திருமுறை, 192.