பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருவினையொப்பு

“பணி செய்து கிடப்பதே” என்ற அருள்வாக்கு எண்ணத்தக்கது. வாழ்வியல் ஒரு விந்தையான அமைப்பு. செயல் செய்வது, அதாவது வினைகளை இயற்றுவது தவிர்க்க முடியாத கடமை. ஆயினும், வினைவழி, இன்பமும், துன்பமும் நஞ்சு வட்டமாகச் சுழன்று வாராமல் தற்காப்பது அவசியம். அதற்கென்ன வழி? செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதனுடைய விளைவுகளை - பலாபலன்களைத் தன் வயப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னயந்த சார்புணர்வுடன் நல்லதே செய்தாலும் வினை நீக்கத்திற்கு வழியில்லை. இன்பம் வந்துழி மகிழ்தலும் துன்பம் கண்டுழித் துயருறுதலும் நடுநிலை வழுவிய வாழ்வியல், அதனால் திருவள்ளுவர் “நன்றாங்காலும் மகிழற்க; அல்லாக் காலும் அமைந்து அழாதிருக்க; வேண்டுதல் வேண்டாமை என்ற கறங்கு வட்டாரத்தினின்று விலகி வாழ்க்கை விளையாட்டை நிகழ்த்துக. அவ்வழி, வினை நீங்கும்; துன்பம் நீங்கும்” என்றறிவுறுத்தியுள்ளார்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?[1]

என்பார்.

எடுத்த பணிகளில் இடையறவு படாமை

பணிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். தொடங்கிய பணிகளை இடையில் நிறுத்துதல் நன்றன்று. அப்பழக்கம், பணிகளின் பயனைக் குறைக்கும்; அது மட்டுமன்று, துன்பத்தையும் தரும் பற்றி எரியும் வீட்டை ஒரு புறம் அனைத்துவிட்டு இன்னொரு புறம் அணைக்காமல் இருப்பதால் யாது பயன்? தீயினால் வீடு அழிந்துவிடும். ஒரு புறம் அணைத்ததன் முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆதலால் பணிகளை இடையில் நிறுத்துதல் நம் வாழ்க்கைக்

  1. திருக்குறள், 379.