பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

117


குரிய வழியன்று. பணிகள் துன்பத்தோடு தொடர்புடையனதாம். இனிய மக்கட் பேற்றுக்குக் கூட, தாய் செங்குருதி சிந்தத்தானே வேண்டியிருக்கிறது. ஆதலால், பணிகளை மேற் கொண்டு வாழ்தல் என்பது மலர்கள் பரப்பப்பட்ட பாதையன்று. ஆயினும் துன்பம் கண்டு துவளாது, சோர்வடையாது - இடுக்கண்களின் காரணமாக இடையில் நில்லாது பணிகளைத் தொடர்ந்து செய்தலே வாழ்வாங்கு வாழும்நெறி. திருஞானசம்பந்தர், “இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்”[1] என்பார். அப்பரடிகளின் வாழ்க்கைப் பயணத்தில் விளைந்த இடுக்கண்கள் ஒன்றா? இரண்டா? இடுக்கண்கள் நிறைந்த அவருடைய பயணத்தை நாடு உள்ளவாறு அறியவில்லை. ஏன், இடுக்கண்களுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சுகின்ற மதத் தலைவர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டனர்; அது மட்டுமா? கற்சிலையாகவும் செய்து விட்டனர். அப்பரடிகளின் புரட்சியினால் சமுதாயம் மாற்ற மடையவில்லை. ஆனால் சமயப் புரோகிதர்களுக்கு அப்பரடிகள் பெயரால் - குருபூசையின் பெயரால் விலாப்புடைக்க உண்ணச் சோறு கிடைக்கிறது. உண்ட களைப்பு நீங்கப் பேச, பேச்சுமேடை கிடைக்கிறது; கதாகாலட்சேபம் நடக்கிறது. வயிறு குலுங்கச் சிரிப்பதால் உடலசையாது போனாலும் உணவு செரித்து விடுகிறது. இன்றையச் சமய உலகம் அப்பரடிகளின் கொள்கைகளைக் கல்லறையில் புதைத்து விட்டு அவருக்குச் சிலை எடுத்து, விழா எடுத்துச் செகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை எதிர்த்து,

நாமர்க்கும் குடியல்லோம்[2]

என்று விடுதலை முழக்கம் செய்தவர் அப்பரடிகள். அந்த விடுதலை முழக்கத்திற்கு அவர் கொடுத்த விலை அம்மம்ம! நீற்றறையைக் கடந்து வென்றார். பண்ணொடு பாட்டுக் கலந்த வாழ்க்கையை, இயற்கையோடிசைந்த வாழ்க்கையை

  1. திருஞான சம்பந்தர், மூன்றாந்திருமுறை, 4-ஆவது பதிகம், திருவாவடுதுறை, 1.
  2. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 961.