பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது காண்க. திருமுறை ஆசிரியர்கள் அம்மையப்பனாகவே கடவுளைக் கண்டு வாழ்த்துகிறார்கள். திருவள்ளு வரும் “ஆதிபகவன்”[1] என்கிறார். ஆதலால் இல்லறம் தவமன்று என்று கருதுவது பிழை. இல்லறத்தில் துறவின் உட்கூறுகள் இல்லை என்று கூறுவதும் பிழை சிறுத்தொண்ட நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில், இளையான் குடிமாற நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில் துறவின் தோற்றங்கள் இல்லையா? விளைவுகள் இல்லையா? இளையான்குடிமாற நாயனார் குடும்பத்தில் விளைந்த அளவுக்குத் துறவு உணர்ச்சி, துறவிகளால் ஆட்சி செய்யப்பெறும் சமய நிறுவனங்களில் கூட இன்று இல்லையே. ஆதலால் இல்லறம் நல்லறமே. நன்றுடையானாக விளங்கும் நமது வழிபடும் தெய்வமாகிய சிவபெருமான் பெண்ணின் நல்லாளோடு பெருந்தகையாக இருந்தே உயிர்களைக் காப்பாற்றுகின்றான். இல்லறம் ஏற்க என்று மனிதனை வழி நடத்துகிறான்.

வாழ்க்கைத் துணை நலம்

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”[2] - என்பது வள்ளுவர் வாக்கு அறனெனப்பட்டதே என்ற தேற்றே காரத்தினால் இல்லறம் அறமே என்று ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாக்குகிறார். ஆயினும் இல்லறம் இருவர் சேர்ந்து செய்யும் அறம். அதில் ஒருமித்த அன்பில் பழி தோன்ற அனுமதிக்கக்கூடாது. ஒரோவழி அவர்தம் அன்பின் குற்றங்கள் தோன்றினாலும் அக்குற்றங்கள் அயலறியாவகையில் வாழ்தல்வேண்டும். மாறாத அன்பில் குற்றங்கள் குணமாக்கப்படுதல் வேண்டும். இதற்குத் திருநீலகண்ட நாயனார் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, கண்ணகியின் வரலாறு உயிரோட்டமான ஓர் ஒப்புமை. இல்லறத்தில் மனிதன் பெறும் துணை “சம்சாரம்” அன்று. அத்துணையை “வாழ்க்கைத் துணை நலம்” என்பார் வள்ளுவர். ஆம் அவள் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை. அதுமட்டுமல்லள்;

  1. திருக்குறள், 1.
  2. திருக்குறள், 49.