பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காதல்

மனையறத்தில் வாழ்வோர் இயற்கையின் காரணமாக ஈருடலில் வாழ்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் அவர்களுடைய வாழ்க்கை அமையவேண்டிய முறையை,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு[1]

என்று அழகுறக் கூறுகின்றார்.

குடும்பத் தலைவனாகிய தலைமகன், அவளைக் கண்ணின் பாவையாகக் கருதுகின்றான். அவள் அவனைத் தன் நெஞ்சத்தவராகக் கருதுகின்றாள். இந்தக் காதற் சிறப்பு குடும்பத் தலைவிக்கு அமையாவிடில், வழிபடும் அம்மையாகிய உமையே தக்கன் வேள்வியில் பெற்ற இழிநிலைமை எய்துவாள். அது வரலாறன்று! ஆயினும், வாழ்வோருக்கு உண்மையை உணர்த்த எழுந்த அறவுரை; ‘இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்க’ என்று மனிதனை வாழ்க்கைத் துணை நலத்துடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் அமர்த்துகிறார் வள்ளுவர்.

அறிவறிந்த மக்கட் பேறு

மனிதனை இல்வாழ்க்கையில் அமர்த்திய திருவள்ளுவர் விரைந்தோடிச் சென்று, தொட்டிலை வாங்கி வருகிறார்; ஆம்; வள்ளுவர் எதிர்பார்ப்பது மனித சமுதாயத்தைத் தொடர்ந்து வாழ்வித்தருளும் மக்கட்பேற்றை, அஃது இயற்கைதானே! அதற்கென்ன வள்ளுவரின் எதிர்பார்ப்பு? வள்ளுவர் மக்கட்பேற்றை மட்டுமா எதிர் பார்க்கிறார். தொட்டிலை வாங்கி நடு வீட்டில் வைத்த திருவள்ளுவர், மனையறம் மேற்கொண்டோரின் காதில் ஏதோ ஓதுகின்றார்; அங்ஙனம் காதில் ‘கிசுகிசு’வென ஓதியதும் எப்படியோ திருக்குறளில் இடம்பெற்றுவிட்டது. அவர்கள் செவிகளில்

  1. திருக்குறள், 1122.