பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

131


அவனும் அவளும் தனித்து வாழ்கின்றனர். உடல்களால் மட்டும் தனித்து அல்ல. உயிர்களால் தனித்து அல்ல. காதலின்பத்தை அருளின்பமாக மாற்றிப் பரபரப்பான உலகத்திலிருந்து விலகித் தனித்து வாழ்கின்றனர். இப்போது விழைவு இல்லை; விருப்பமில்லை. தாம் கடந்து வந்த காலத்தின் வாழ்க்கைப் பயணங்களைத் திறனாய்வு செய்கின்றனர். புலன்களைத் துய்மையாக்குகின்றனர்; அவ்வழிப் பொறிகளில் தூய்மை காக்கின்றனர்; தவம் செய்கின்றனர். இறைநெறி நிற்கின்றனர். தமிழின் நாகரிகத்தில் இங்கேயே துறவு மலர்கிறது.

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே[1]

என்பது தமிழர் வாழ்வியல் நெறி.

வீடு

திருவள்ளுவர் கடவுளை வாழ்த்தி வாழும்படி வழி நடத்துகின்றார். திருவள்ளுவர் முதிர்ந்த ஞானி; சீவன் முத்தர்; திருவடி ஞானம் பெற்றவர். அதனால், திருவடிகளையே தொழத் தூண்டுகிறார். வழிபாட்டால் பொறிகள் தூய்மை பெற்று, மற்றவர் சுவைத்தற்குரிய சுவையினைப் பெற்று விளங்க வேண்டுமென்பது வள்ளுவர் நெறி.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.[2]

பொறிகளை “அவித்தல்” திருவள்ளுவர் கண்டுணர்த்திய செந்நெறி. திருவள்ளுவர் பொறிகளை அடக்கவோ அழிக்கவோ சொல்லாமல் அவித்தல் என்று கூறுவது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சுவைத்தற்குரியனவாகவும் ஆனால் இயல்பில் சுவையில்லாதனவாகவும் இருப்பனவற்றைச்

  1. தொல்காப்பியம், கற்பியல், 51.
  2. திருக்குறள், 8.