பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

133


மகிழ்வைத் தராது. கடலிடைக் கிடப்பவர் கரையேறவே நினைப்பர். பிறவிக் கடலில் கிடந்திடும் நம்மை எடுத்து ஆளும் திருவடிகள், இறைவன் திருவடிகள். நம்மைக் கடலிலிருந்து எடுத்திடும் திருவடி, அறத்தின் திருவுருவம். அறத்தின் வடிவமாய் அமைந்துள்ள கடல் அவன். உவர்ப்புக் கடலில் உருக்குலைந்து கிடக்கும் நம்மை, உவப்புக் கடலுக்கு எடுத்தாளும் திருவடிகள். உவர்ப்புக் கடல் அலைமோதுகிறது, அவலத்தைத் தருகிறது; கவலையைத் தருகிறது. மனக் கவலையை மாற்றத் ‘தனக்குவமை யில்லாதான் தாளினை’ வாழ்த்திடுவோம்; அத்திருவடிகளை அணைந்து இன்புறுவோம். அத்திருவடிகளை நாம் சார்ந்திட இருவினையும் கடந்திட வேண்டும். நல்வினையும் துன்பமே, தீவினையும் துன்பமே. இவ்விரண்டுக்கும் வித்து புகழ் விரும்பல். இறைவனின் பொருள் சேர் புகழை விரும்பிப் போற்றினால் இருவினையும் அகலும். புகழையே துறந்தமையால் வேண்டுதலும் இல்லை வேண்டாமையும் இல்லை. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவனைச் சார்ந்த நமக்கு யாண்டும் இடும்பை யில வேண்டுதலும் இன்மையால் புகழ் நாட்டமில்லை. அதனால் பொறிகள் தூய்மையாயின. அதனால் அத் தூயோன் திருவடிகள் மனத்தகத்தே வந்து மன்னி நின்றன. அவன் கருணையினால் உலகம் ஒரு முதலாகி நிற்கிறது. உலகம் வாழ்க! எல்லா உலகமுமாய் நிற்கும் இறைவன் வாழ்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

தொகுப்புரை

நமது சமயத்திற்கு-இந்து சமயத்திற்கு உரிய உண்மையான மறைநூல், திருக்குறளேயாம். திருக்குறள் நமது சமயத்தின் தனித் தன்மையையும் விளக்குகிறது, அதே போழ்து எல்லைகளற்ற பொதுமைக்கும் துணையாக நிற்கிறது. இதுபோன்ற ஒருமறை நூல் உலகத்தில் வேறு எந்தச் சமயத்திற்கும் கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைத்தற்