பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலைக்கு ஏறி வளரும் நிலையில்தான் சிவநெறி தோன்றியது. அந்தப் படிகளைக் காணும் முயற்சியில் தோன்றியதுதான் விஞ்ஞானம். ஆதலால், சிவநெறியின் அடித்தளம் வாழ்க்கையின் படிப்பினைகளும் அறிவுமேயாம். அப்படியெனில் உலகின் அறிவியல் புதுமைகளை, அதுகண்ட புதிய உண்மைகளைச் சமய நெறிகள் ஏற்றுக் கொள்ளாது புறத்தே தள்ளியிருக்கின்றனவே! அங்ஙனம் புதிய உண்மைகளைக் கண்ட விஞ்ஞானிகளைச் சமய நெறியாளர்கள் துன்புறுத்தி யிருக்கிறார்களே! என்ற வினாக்கள் எழலாம்.

ஆம்! அந்த வரலாற்று உண்மைகளை நாம் மறுக்கவில்லை! இத்தகைய செய்திகள் மேற்றிசை நாட்டு வரலாறுகளில் உண்டு. அந்நாட்டு வரலாற்றிலும்கூட, சமயம், வாழ்க்கை நெறியாகத் தூய்மையுடன் விளங்கிய காலத்தில் நிகழ்ந்தவையல்ல. ஆனால், அங்ஙனம் சமய நெறியாளர்கள் விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்தியவர்கள் உண்மையான சமய நெறியாளர்கள் அல்லர்.

இத்தகைய துன்பம் தரும் நிகழ்ச்சிகள், சமயம் வாழ்க்கையிலிருந்து விலகி, இயக்கத் தன்மையிலிருந்து தேக்கத் தன்மைக்குத் தடம் புரண்டு ஆதிக்கத்தை மையமாகக் கொண்டிருந்த காலத்தில் நடந்தவையாகும். இங்ஙனம் சமய நெறிப் போர்வையில் நடமாடும் ஆதிக்க சக்திகள் மூலம், சமய நெறிக்கு விளைந்த ஊறுகள் பலப்பல. உண்மையான சமய நெறியாளர்கள் புதுமையை வரவேற்கவே செய்வர்.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

(திருவாசகம், திருவெம்பாவை. 9)

என்ற மாணிக்கவாசகர் வாக்கும்,