பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமயங்களைப் பற்றிப் பேசுகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்தந்தச் சமய நெறியின் சிறப்பை, கொள்கைகளை உள்ள ஈடுபாட்டுடன் கூறுகிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அடிகள் பாடிய ஆய்ச்சியர் குரவை, ஆய்ச்சியர் குரவையைப் படிக்கும் பொழுது திருமால் நெறியில் தோய்ந்து ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களைப் படிக்கும் பொழுது என்ன உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறதோ அதே உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறது என்றால் மிகையாகாது.

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவிர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாஎன்னா-நாவென்ன நாவே

(சிலப். ஆய்ச்சியர் குரவை-37)

என்ற பாடலையும்,

சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள் எந்நாளும் நாளாகும்-என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துகளன் வாய்

(நாலா: 2298)

என்ற பாடலையும் இணைத்துப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அதுபோலவே அவர் சொல்லும் முறையில் காணப்படும் குறிப்பின் அடிப்படையில் அடிகள் சிவநெறியைச் சார்ந்தவரென்று துணிய முடியும். ஆயினும் அது நமது நோக்கமன்று.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்

(சிலப். வேட்டுவ வரி-21)

என்று போற்றுகின்றார். சிலப்பதிகாரத்தில் நகரங்களை அணி செய்யும் திருக்கோயில்களைக் குறிப்பிடும் பொழுது