பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

161


தமிழ் மரபுக்குப் புதியனவாய் அமைந்த செய்திகள் சில வழி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து புராண காலம் தோன்றுகிறது. இந்தக் காலம் சைவத்திற்கு அவ்வளவு நல்ல காலமாக அமையவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரண்டு நல்ல புராணங்கள் தோன்றின. இங்கே மிகச் சிறந்த வரலாற்றுப் புராணமாகிய பெரிய புராணம் சாத்திர காலத்துக்கு முந்தியது என்பது குறிக்கத்தக்கது.

ஆயினும் பல புராணங்கள் இந்த நூற்றாண்டிலேயே செய்யப்பெற்றன. அவைகளில் ஏற்புடையன மிக மிகச் சிலவே. பல புராணங்கள் சிவநெறியை ஊடுருவிச் சிதைக்கும் நோக்கத்துடன் கூட செய்யப்பட்டனவோ என்று கருதத்தக்க அளவில் அமைந்துள்ளன. அவை பிற்காலத்தில் தோன்றிய பகுத்தறிவுவாதிகளுக்குப் பெருந்தீனியாகப் போய்விட்டன. அவைகளை உள்ளவாறறிந்து ஒதுக்குதல் இன்றுள்ள தலையாய கடமை.

சைவ சித்தாந்த சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து திருமடங்களின் காலம் தொடங்குகிறது. சமயாசாரியர்களாலும் சந்தானாசாரியர்களாலும் போற்றி வளர்க்கப் பெற்ற சமய நெறிகளை, நிலையான நிறுவனங்கள் அமைத்துத் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும்; சிவ ஞானத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்நெறியில் அவர்களை வழிநடத்த வேண்டும்; சிவஞான நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சைவத் திருமடங்கள் காணப் பெற்றன. சைவத் திருமடங்கள் பதினெட்டு என்ற வழக்கு உண்டு.

1 திருவாவடுதுறை ஆதீனம், 2. தருமபுர ஆதீனம், 3. காஞ்சிபுரம் ஆதீனம், 4. சூரியனார் கோவில் ஆதீனம், 5. செங்கோல் ஆதீனம், 6. ஆகமசிவப்பிரகாச ஆதீனம்,