பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

167


செந்நெறியின் திருமடங்கள் இதுபற்றி எண்ணத் திருவுள்ளம், கொள்ள வேண்டும்.

சித்தாந்தச் செந்நெறியை அதன் தனித்தன்மையோடு பாதுகாக்க முன்வர வேண்டும். சித்தாந்தச் செந்நெறி, உலகப் பொது நெறியாவதற்குரிய தத்துவச் சிறப்புடையது; சமுதாய நோக்குடையது. அது, முன்னைப் பழைய நெறி; பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுக்கும் பெரு நெறி. இத்தகு சிறப்பு வாய்ந்த சித்தாந்தச் செந்நெறி என்றும் நின்று நிலவுவதாகுக!


2. சைவ சித்தாந்தத் தத்துவம்


உயிர்த் தொகுதி பலப்பல. உயிர்களின் தோற்றத்திற்குப் பல நூறாயிரம் வாயில்கள். உயிர்களைத் தமிழர் ஐவகைப் படுத்தினர்; மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது தமிழர் கொள்கை; தொல்காப்பியர் காலத்துக் கொள்கை என்பதை மறவற்க இக்கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டது அண்மைக் காலத்தில்தான்! ஆனால் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “மரம் செடிகளும் உயிருடையனவே; ஆயினும் இயக்கக் குறைவு உடையன” என்று கண்டுணர்த்தினார் தொல்காப்பியர்.

புல்லும் மரமும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.