பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

169


நன்றாயினும் தீயதாயினும் உள்ளவாறு அறிதல் அறிவு. அறிந்ததற்கேற்பத் தீமையிலிருந்து விலகி, நன்னெறியில் நிற்றல் ஒழுக்கம். அறிவு என்பது பயன்படும் ஆற்றலால் உடைமை போலக் கருதப் பெற்றாலும் அதுவும் ஒரு தொழிற் கருவியேயாம். இந்தப் படி முறை வளர்ச்சிகளில் மானிடச் சாதி தம் சீரான வாழ்க்கைக்கும், சிறப்புடைய வாழ்க்கைக்கும் கண்டதே சமயம்.

“சமயம்”, “மதம்” என்ற சொல் வழக்குகள் பழங்காலத்தில் இருந்ததில்லை. மணிமேகலை “சமயம்” என்ற சொல்லைக் கொண்டு வருகிறது. மதம் என்ற சொல்லை “மாணிக்கவாசகர்” எடுத்தாண்டுள்ளார். நன்னூலில் மதம் என்ற சொல் கொள்கை அடிப்படையில் எடுத்தாளப் பட்டுள்ளது. பின்னால் தோன்றிய கொள்கைகளில் பெரும் பாலானவை கடவுள், ஒழுக்கம் போன்றவைகளோடு மிகுதியும் சார்ந்திருந்ததால் இவைகளை மதம் என்ற சொல்லால் அழைப்பது பெருவழக்காயிற்று. பின், மதம் என்ற சொல்லில் உணர்த்தப் பெறும் பொருள் இறுக்கமான பிடிப்பு, வெறி ஆகியன மேவியதால் தூய இனிய சொல்லாகிய சமயத்திற்கு வந்தன. மதம், சமயம் என்ற இரண்டு சொற்களையுமே கூட நமது திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் சிவநெறியைக் குறிக்கப் பெருவழக்காக எடுத்தாளாமையே சான்று. திருமுறை ஆசிரியர்கள், “திருநெறி”, “நன்னெறி”, “அருள்நெறி”, தவநெறி என்றே மிகுதியும் குறிக்கின்றனர். சமயத்திற்கு ஒரு குறிப்பிட்ட சொல் வழக்காகத் தமது சாத்திர நூலில் மெய்கண்டார் “நெறி” என்ற சொல்லையே கையாளுகிறார். அருணந்தி சிவம், சமயம் என்ற சொல்லைக் கையாளுகிறார். இனி, “சமயம்” என்ற சொல்லை நாம், சிவநெறி, சைவ சமயம் என்ற கருத்தில் கையாளலாம்.

உலகம் முழுதும் வாழ்ந்த மானிடர் சாதி தத்தம் வாழ்க்கைப் படிப்பினைகள் மூலம் சில வாழ்க்கை